பிரபல நடிகை சுமலதாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகை சுமலதா நடித்துள்ளார். தமிழில் திசை மாறிய பறவை, முரட்டு காளை, கழுகு, ஆராதனை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 1991 டிசம்பரில் கன்னட நடிகர் அம்பரீஷை இவர் திருமணம் செய்து கொண்டார். நடிகரும் அரசியல்வாதியுமான அம்பரீஷ் கடந்த 2018-ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஆதரவுடன் அம்பரீஷின் சொந்த தொகுதியான மண்டியாவில் போட்டியிட்ட சுமலதா அமோக வெற்றி பெற்றார். கொரோனா ஊரடங்கின்போது தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை அவர் செய்து வந்தார்.
இந்த சூழ்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அவரே ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,”கடந்த 4-ம் தேதி தலைவலி, தொண்டையில் கடும் எரிச்சல் ஏற்பட்டது. இதைத் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டேன். இதில் எனக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை சந்தித்தவர்கள் அனைவரும் வைரஸ் தொற்று பரிசோதனையை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். முன்னெச்சரிக்கையாக உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார்.