பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங், பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் அண்மையில் ஒரு புகார் அளித்தார். அதில் “சுஷாந்திடம் இருந்து ரூ.15 கோடி பணம், பல கோடி மதிப்புள்ள சொத்துகளை நடிகை ரியா சக்கரவர்த்தி பறித்துள்ளார். அவரே சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியுள்ளார்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
பிஹார் காவல் துறை தலைவர் குப்தேஸ்வர் பாண்டே சில நாட்களுக்கு முன்பு கூறும்போது,”கடந்த 4 ஆண்டுகளில் சுஷாந்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.50 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.15 கோடி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பணம் யாருக்கு கைமாறியது என்பது குறித்த உண்மைகளை கண்டறிய வேண்டும்” என்று தெரிவித்தார்.

நடிகை ரியா மும்பையில் பல்வேறு இடங்களில் சொகுசு வீடுகளை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே சுஷாந்தின் பணத்தை நடிகை ரியா ஆட்டையை போட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே சுஷாந்த் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பிஹார் முதல் நிதிஷ் குமார் மத்திய அரசுக்கு அண்மையில் பரிந்துரைத்தார். இதை ஏற்று வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் நேற்று முறைப்படி வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையில் பண முறைகேடு தொடர்பாக நடிகை ரியா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி மத்திய அரசின் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
ஆனால் ரியாவும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாக உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி நடிகை ரியா மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்த பின்னணியில் நடிகை ரியா அமலாக்கத் துறை விசாரணைக்காக மும்பையில் உள்ள அலுவலகத்தில் ஆஜராவாரா, எஸ்கேப் ஆவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.