பிரபல பாவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து திரையுலக பிரபலங்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக புதிய படவாய்ப்புகள் இல்லாதது, பொருளாதார நெருக்கடி காரணமாக சுஷாந்த் உயிரிழந்தாரா, இல்லை வேறு காரணங்கள் உள்ளனவா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சுஷாந்த் சிங்கின் காதலி ரேயா சக்கரவர்த்தியிடமும் போலீஸார் பல மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் சுஷாந்தின் கிரெடிட், டெபிட் கார்டுகளை ரேயா பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
சுஷாந்த் சிங்கின் மரணத்துக்கு காதலி ரேயா சக்கரவர்த்தியே காரணம் என்று ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் ஒருவர், ரேயா சக்கரவர்த்தியை பலாத்காரம் செய்துவிடுவேன் என்றும் கொலை செய்துவிடுவேன் என்றும் சமூக வலைதளம் வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நடிகை ரேயா சக்கரவர்த்தி மும்பை போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நடிகை ரேயா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “தங்க கொள்ளைக்காரி, கொலைகாரி என்று குற்றம் சாட்டினீர்கள். நான் அமைதி காத்தேன்.
நான் தற்கொலை செய்துகொள்ளாவிட்டால் பலாத்காரம் செய்துவிடுவேன், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். இதுதொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.