போதை பொருள் உட்கொண்டது உண்மையே.. நடிகை ரியா ஒப்புதல்… வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்திடம் இருந்து அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி ரூ.50 கோடி பணத்தை அபகரித்து கொண்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பீகார் தலைநகர் பாட்னா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சுஷாந்த் மரண வழக்கை மும்பை போலீஸார் தனியாக விசாரித்து வந்தனர். பிஹார் போலீஸாருக்கும் மும்பை போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சுஷாந்த் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பீகார் அரசு பரிந்துரை செய்தது. இதை மத்திய அரசு ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து நடிகை ரியா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதன்பேரில் சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதனிடையே நடிகர் சுஷாந்த் சிங்குக்கு ரியா போதை பொருள்களை வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் தனியாக விசாரணை நடத்தினர்.
அதில் ரியா போதை பொருள் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
மறைந்த நடிகர் சுஷாந்துக்காக போதை பொருள் வாங்கியதாக நடிகை ரியா முதலில் கூறி வந்தார். தற்போது போதை பொருளை தானும் பயன்படுத்தியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு வட்டாரங்கள் கூறும்போது, “போதை பொருள் உட்கொண்டதை நடிகை ரியா ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் போதை பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சை எடுத்து வந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளன.