பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தோனி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த சுஷாந்தின் மரணம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கும்பலின் திரைமறைவு நடவடிக்கைகளே, சுஷாந்தின் மரணத்துக்கு காரணம் என்று முதலில் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திடீர் திருப்பமாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் அளித்தார். அதில் “சுஷாந்திடம் இருந்து ரூ.15 கோடி பணம், பல கோடி மதிப்புள்ள சொத்துகளை நடிகை ரியா சக்கரவர்த்தி பறித்துள்ளார்.
அவரே எனது மகனை தற்கொலைக்கு தூண்டியுள்ளார்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக பிஹார் போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த மாநில போலீஸின் தனிப்படை மும்பையில் முகாமிட்டுள்ளது.

சுஷாந்த் வழக்கில் மும்பை போலீஸாருக்கும் பிஹார் போலீஸாருக்கும் இடையே ஈகோ மோதல் வெடித்துள்ளது.
இதற்கிடையில், “சுஷாந்த் ஒரு குண்டன், அந்த குண்டன் என் கைக்குள்ள இருக்கிறான்” என்று நடிகை ரியா மோசமாக நக்கலடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுஷாந்துக்கு, நடிகை ரியா மர்மமான மருந்துகளை வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் மலை போல புகார்கள் குவிந்து வருகின்றன.
மும்பையில் உள்ள வீட்டில் இருந்து நடிகை ரியா ஓடிவிட்டதாகவும் எங்கேயோ தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தன் மீது பாட்னாவில் தொடரப்பட்டிருக்கும் வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு அவர் படியேறியிருக்கிறார்.

நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் நடிகை ரியா சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் “நான் நல்லவள், என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. சத்தியம் ஜெயிக்கும்” என்று கூறி அழகாக அழுகிறார்.
இதற்கிடையில் அமெரிக்காவில் வசிக்கும் சுஷாந்தின் அக்கா ஸ்வேதா சிங் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரு முறையீட்டை வைத்திருக்கிறார்.
“டியர் சார், நாங்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
பாலிவிட்டில் எனது தம்பிக்கு காட் பாதர் யாருமே கிடையாது. எனது தம்பியின் மரணத்தில் சாட்சிகள், ஆவணங்கள் அழிக்கப்படுகின்றன. அவனது மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சுஷாந்தின் இளம்வயதிலேயே அவரது தாயார் உஷா சிங் இறந்துவிட்டார். அப்பா கே.கே.சிங், அக்காக்கள் ஸ்வேதா சிங், மிது சிங்கின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். தற்கொலைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக அம்மாவை நினைத்து உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டார்.
அவரது மரணத்தால் துவண்டு போயியிருக்கும் அக்கா ஸ்வேதா சிங் கிட்டத்தட்ட காளியாகவே மாறி விட்டார். அவரது ஆவேசத்தாலேயே தந்தை கே.கே. சிங் போலீஸில் துணிச்சலாக புகார் அளித்துள்ளார். இப்போது பிரதமர் நேரந்திர மோடியிடம் ஸ்வேதா நேரடியாக முறையிட்டிருக்கிறார்.