சர்ச்சையுடன் தொடங்கிய நடிகை வனிதாவின் 3-வது திருமணம்

நடிகை வனிதாவுக்கும் அவரின் நண்பருமான பீட்டர் பாலுக்கும் கடந்த 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது பீட்டர் பாலின் மனைவி, எலிசபெத் வடபழனி காவல் நிலையத்தில் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை வனிதா

நடிகை வனிதா விஜயகுமாரை தொடர்ந்து சர்ச்சைகள் துரத்தி வருகின்றன. இவர், கடந்த 1995-ம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார்.

நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள் என்ற இமேஜ்வுடன் கோலிவுட்டில் அறிமுகமான இவர், பெரிய ஹீரோயின் என்ற நிலைக்கு செல்லவில்லை.

அதனால் இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தார். முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்தது. முதல் மற்றும் 2-ம் திருமணம் மூலம் நடிகை வனிதாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். திருமண வாழ்க்கையும் கசந்ததால் அடுத்தடுத்து விவகாரத்து பெற்றார் நடிகை வனிதா.

3-வது திருமணம்

இதற்கிடையில் நடிகர் விஜயகுமாருடன் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் மீண்டும் நடிகை வனிதா விஜயகுமார் விமர்சனத்துக்குள்ளாகினார். இருப்பினும் பிரபலமடைந்த நடிகை வனிதா விஜயகுமார், யூடியூப் சேனலில் சமையல் நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

யூடியூப் சேனல் மூலம் அறிமுகமான விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால். இருவரும் காதலித்தனர். பின்னர், கடந்த 27-ம் தேதி வனிதாவின் வீட்டிலேயே சிம்பிளாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஊரடங்கு காரணமாக இருவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் அழைப்புவிடுத்தனர். கிறிஸ்தவ முறைப்படி இருவரின் திருமணமும் நடந்தது.

முதல் மனைவி புகார்

மணமகளான நடிகை வனிதா வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தார். அவரை தோழி ஒருவர் அழைத்து வர கிறிஸ்தவ முறைப்படி நடிகை வனிதாவின் கையில் மோதிரத்தை அணிவித்தார் பீட்டர் பால்.

பின்னர் பீட்டர் பாலின் கையில் நடிகை வனிதாவும் மோதிரம் அணிவித்து தங்களின் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

இவர்களின் திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு திரைப்பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்தசூழலில் நடிகை வனிதா, பீட்டர்பால் திருமணம் முடிந்த மறுநாளே வடபழனி காவல் நிலைய படியேறியுள்ளார் பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத். அவர் அளித்த புகாரில், எனக்கும் பீட்டர் பாலுக்கும் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தோம்.

எனக்கு பீட்டர்பால் விவகாரத்து கொடுக்காத நிலையில் நடிகை வனிதாவை திருமணம் செய்துள்ளார். இதுசட்டப்படி தவறு. இதுகுறித்து நடிகை வனிதாவிடமும் பீட்டர் பாலிடமும் கேட்டதற்கு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவின்பேரில் வடபழனி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

வனிதா விளக்கம்

இதுகுறித்து நடிகை வனிதா கூறுகையில், சினிமாக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் பெரிதாக பேசப்படுகின்றன. என்னைப்பற்றி பீட்டருக்கும் அவரைப்பற்றி எனக்கும் நன்றாக தெரியும். எங்கள் வீட்டிலிருந்துதான் பிரச்னை வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் பீட்டரின் முதல் மனைவியிடமிருந்து பிரச்னை வந்துள்ளது. அந்தப்பிரச்னையை சட்டப்படி எங்களின் வழக்கறிஞர்கள் டீம் பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் இருவரும் ஹேப்பியாக இருக்கிறோம் என்றார்.

போலீஸாரிடம் கேட்டதற்கு பீட்டர் பால் என்பவரின் மனைவி எலிசபெத் ஹெலன், எங்களிடம் கொடுத்த புகாரின்பேரிலும் அவர் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படவுள்ளது. எலிசபெத் ஹெலன் தரப்பினர் எங்களுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தால் நடிகை வனிதா, பீட்டர்பாலிடம் விசாரணை நடத்தப்படும் என்றனர்.

சர்ச்சையுடன் தொடக்கம்

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கூறுகையில், எனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நடிகை வனிதாவை பீட்டர்பால் திருமணம் செய்யப்போவதாகத் தகவல் கிடைத்ததும் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அப்போது, திருமணம் செய்துகொள்ளவில்லை என்று பீட்டர்பால், நடிகை வனிதா தரப்பினர் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர். எனவே விவகாரத்து பெறாமல் திருமணம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

நடிகை வனிதா, பீட்டர்பால் திருமண வாழ்க்கை சர்ச்சையுடன் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *