`ஃப்ரெண்ட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. சென்னையில் பிறந்த இவர் பெங்களூருவில் வளர்ந்தவர். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வாழ்த்துக்கள் என்ற படத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்த போது அவருக்கும் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக இணையதள மோதல் இருந்துவருகிறது.
கடந்த மார்ச் மாதம் சீமான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் ‘சீமான் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறியதன் பேரில் அவருடன் 3 ஆண்டுகள் வாழ்ந்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார் என புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் தன்னை மிரட்டுவதாக நடிகை விஜயலட்சுமி யூடியூப் வீடியோக்களைப் பதிவு செய்து வந்தார்.

இந்தநிலையில் நடிகை விஜயலட்சுமி அவர்களே நாவை அடக்குங்கள். சீமான் அவர்கள் எனது ரத்தம் என பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், `நடிகை விஜயலட்சுமி அவர்களின் கவனத்திற்கு கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி அவர்களே உங்கள் வாழ்க்கையில் நடந்த தனிப்பட்ட சம்பவங்கள் குறித்து வீடியோ பதிவு செய்து வந்தீர்கள்.
அதை அனைவரும் அறிவோம். சீமானின் தாயாரை இழிவுப்படுத்தும் வகையில் தகாத வார்த்தைகளைக் கூறி வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள். அதை வன்மையாக கண்டிக்கிறோம். பெண்களுக்கு எப்போதுமே மரியாதை கொடுப்பவர்கள் நாங்கள். அவர்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்பவர்கள் நாங்கள்.
அதே வேளையில் சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தோடு நீங்கள் தேவையில்லாமல் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகிறீர்கள். சீமான், சாதாரண மனிதர் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் தமிழர்களுக்கு ஒப்பற்ற தலைவர்தான் சீமான். சீமானை தவறான முறையில் விமர்சித்து வருகிறீர்கள். தனிப்பட்ட பிரச்னை என்றால் காவல் துறையில் புகாரளியுங்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.
அதை விட்டு சமூகவலைதளங்களில் என்னவேண்டும் என்றாலும் பேசினால், அதை யாரும் கேட்க மாட்டார்கள் என்று கருத வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவன் என்னுடைய ரத்தம். என்னுடைய அன்பு சகோதரர். அவரின் தாயாரை பேசுவது எங்களின் தாயாரை பேசுவதற்கு சமம்.
உங்கள் தாயார் பேசினால் அது எப்படி மனவேதனை தரும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அரசியல் தலைவர்கள் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் பிரச்னைகள் இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பேச யாருக்கும் உரிமை இல்லை. நடிகை விஜயலட்சுமி அவர்களே நாவை அடக்குங்கள்.
இல்லையெனில் நாவை அறுத்தெறியும் சூழல் வரும் என எச்சரிக்கையாகவே கூறி கொள்கிறேன். பீப் சாங் பாடலை பாடியதற்கு கொதித்தெளிந்த மாதர்சங்கள் ஏன் இந்தச் சம்பவத்தை கண்டுக்கொள்வதில்லை. சட்டத்தை நாடுங்கள் சட்டம் அவரைக் தண்டிக்கட்டும் ”என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தான் ரத்த அழுத்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், இதற்கு காரணம் சீமானும், அவரது நாம் தமிழர் கட்சியினரும்தான் என்றும் என்னை இழிவுப்டுத்தி பேசிய ஹரிநாடார் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இதுதான் எனது கடைசி வீடியோ எனவும் கூறியிருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சென்றுள்ளார். அப்போது அவர் பேஸ்புக் வீடியோவில் பேசியபடி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை உடனடியாக மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். நடிகை விஜயலட்சுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை திருவான்மியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலைக்கு முயன்று சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகை விஜயலட்சுமியிடம் அடையாறு மாஜிஸ்திரேட் வெங்கடேசன் இன்று வாக்குமூலம் பெற்றார்.அந்த ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை விஜயலட்சுமி இன்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், நான் நலமாக இருக்கிறேன். உங்களின் அன்பால் நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி வாக்குமூலத்துக்குப்பிறகு போலீஸார் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சீமான், ஹரிநாடார் தரப்பு அமைதியாக இருந்துவருகிறது. போலீஸாரின் மூவ்மெண்ட்டுக்குப்பிறகுதான் சீமான், ஹரிநாடாரின் ரியாக்ஷன் என்னவென்று தெரியும் என அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
நடிகை விஜயலட்சுமி, சீமான் இடையிலான பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா!