பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எல்.கே.அத்வானி (92) காணொலி வாயிலாக பங்கேற்றார்.
அவர் உட்பட அனைவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
அப்போது ஜெய் ஸ்ரீராம் என்று கூறி அத்வானி தீர்ப்பை வரவேற்றார். அவர் மேலும் கூறியதாவது:
ராமஜென்ம பூமி இயக்கம் தொடர்பான எனது சொந்த நம்பிக்கை, பாஜகவின் நம்பிக்கையை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது.
கடந்த 2019 நவம்பரில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன் அடுத்த படிக்கல்லாக லக்னோ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறேன். இது எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு அழகான ராமர் கோயில் கட்டி எழுப்பப்படுவதை பார்த்து பரவசமாக கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.
அவர்களோடு நானும் ராமர் கோயிலை கண்ணால் காண ஆவலோடு காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.