ஆப்கானிஸ்தானில் கடந்த 1994-ம் ஆண்டில் தலிபான்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பு கடந்த 1996-ம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதோடு அல்-காய்தா உள்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்தது. அண்டை நாடான பாகிஸ்தான், தலிபான்களை அங்கீகரித்து மிகுந்த நெருக்கம் காட்டியது.
கடந்த 2001 செப்டம்பரில் அமெரிக்கா மீது அல்-காய்தா தீவிரவாதிகள், விமானங்கள் மூலம் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 3,000 பேர் உயிரிழந்தனர். ஆவேசமடைந்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த அல்-காய்தா தீவிரவாதிகளை வேட்டையாடியது.
கடந்த 2001 இறுதியில் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை அகற்றிய அமெரிக்க ராணுவம், அங்கு புதிய அரசை அமைத்தது. எனினும் ஆப்கானிஸ்தானின் குறிப்பிட்ட பகுதிகள் இன்னமும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அங்கு அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே தொடர்ந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கமலின் விஸ்வரூபம் படத்தில் ஆப்கானிஸ்தானின் அவலம் தோலுரித்து காட்டப்பட்டிருக்கும்.
அந்த நாட்டின் கோர் பகுதியை சேர்ந்த செல்வாக்கு மிக்க உள்ளூர் தலைவர் ஒருவர், அரசு ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்குள் தலிபான் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர். அவரையும் அவரது மனைவியையும் வெளியே இழுத்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
தாயும் தந்தையும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதை பார்த்த அவர்களது 14 வயது மகள் குவாமர் குல், வீட்டில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியை கையில் எடுத்தார். மற்றொரு துப்பாக்கியை 12 வயது தம்பியிடம் கொடுத்தார்.
குட்டி தம்பியுடன் துணிச்சலாக தெருவில் இறங்கிய சிறுமி குவாமர் குல், தலிபான் தீவிரவாதிகளை நோக்கி பொட்டு, பொட்டுன்னு துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார். இதில் 2 தீவிரவாதிகள் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
சிறுமியின் வீரத்தையும் ஆவேசத்தையும் சமாளிக்க முடியாத மற்ற தீவிரவாதிகள் அங்கிருந்து தெறித்து ஓடினர். பாதுகாப்பு கருதி சிறுமி குவாமர் குல், அவரது தம்பியை ஆப்கானிஸ்தான் அரசு ரகசிய இடத்துக்கு மாற்றியுள்ளது.
ஏகே 47 துப்பாக்கியுடன் வீரத் திருமருமகளாக காட்சியளிக்கும் சிறுமி குவாமர் குல்லின் புகைப்படம் உலகம் முழுவதும் வியாபித்து பரவி வருகிறது.