பிரதமருக்காக ‘பறக்கும் கோட்டை’

பிரதமருக்காக ‘பறக்கும் கோட்டை’ அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்துள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டின் முதல் விவிஜபி ஆவார். துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு நாட்டின் 2-வது விவிஐபி ஆவார். பிரதமர் நரேந்திர மோடி 3-வது விவிஐபி ஆவார்.

இவர்கள் தற்போது ஏர் இந்தியாவின் பி747 விமானங்களில் பயணம் செய்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘ஏர்போர்ஸ் ஒன்’ என்ற அதிநவீன விமானத்தை பயன்படுத்துகிறார். இதே அளவுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் கொண்ட 2 விமானங்களை வடிவமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து பி 777 ரகத்தை சேர்ந்த 2 விமானங்கள் வாங்கப்பட்டன. மத்திய அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் இந்த விமானங்களில், ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானத்தின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன விமானங்களுக்கு ‘ஏர் இந்தியா ஒன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இவை ‘பறக்கும் கோட்டை’ என்று வர்ணிக்கப்படுகின்றன.

ஏவுகணை தடுப்பு அமைப்பு

சுமார் 143 டன் எடை கொண்ட ‘ஏர் இந்தியா ஒன்’ விமானம் 43,100 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது.

ஏர் இந்தியா ஒன் விமானத்தின் உட்புறத் தோற்றம்.
ஏர் இந்தியா ஒன் விமானத்தின் உட்புறத் தோற்றம்.

விமானத்துக்குள் அழகான அலுவலகம், கூட்ட அரங்கு, படுக்கை அறை, சமையல் அறை, 2,000 பேர் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களை வைக்கும் அறை, செயற்கைக்கோள் தொலைபேசி, இணைய வசதி, அவசர கால அறுவை சிகிச்சை அறை, டாக்டர்கள், நர்ஸ்கள் தங்கும் அறை, பிரதமரின் பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை, விஐபிக்கள் தங்கும் அறை என அனைத்து வசதிகளும் உள்ளன.

‘ஏர் இந்தியா ஒன்’ அணியை சேர்ந்த இரு விமானங்களிலும் ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இது அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பமாகும்.

ஆசியாவில் ஜப்பான், தென்கொரியாவுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா வழங்கியுள்ளது. ஆசியாவில் 3-வது நாடாக இந்தியாவுக்கு அதிநவீன ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்தை அமெரிக்கா அளித்துள்ளது.

இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த 2016-ம் ஆண்டில் மறைந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் காலத்தில் கையெழுத்தானது.

‘ஏர் இந்தியா ஒன்’ விமானத்தில் இணைக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் மூலம் எதிரிகளின் ஏவுகணைகளை செயல் இழக்கச் செய்யவும் விமானத்தில் இருந்து பதில் தாக்குதல் நடத்தவும் முடியும். எதிரிகளின் ரேடார்களையும் செயல் இழக்கச் செய்ய முடியும்.

17 மணி நேரம் தரையிறங்காமல் பறக்கும்

‘ஏர் இந்தியா ஒன்’ விமானத்தில் ஜிஇ90-115பிஎல் ரகத்தைச் சேர்ந்த அதிநவீன இரட்டை இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானத்தில் ஒருமுறை எரிபொருளை நிரப்பினால் 17 மணி நேரம் வரை தரையிறங்காமல் செல்ல முடியும். அதாவது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தரையிறங்காமல் பறக்க முடியும்.

நடுவானிலேயே விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப முடியும்.
ஜனாதிபதி, பிரதமர் பயணம் செய்யும் விமானத்தை இதுவரை ‘ஏர் இந்தியா’ விமானிகளே இயக்கி வந்தனர். இனிமேல் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானங்களை விமானப் படையின் சிறப்பு பயிற்சி பெற்ற விமானிகள் இயக்குவார்கள்.

மொத்தம் 8 விமானிகள், விமானத்தில் இருப்பார்கள். இவர்கள் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு மாறி, மாறி விமானத்தை இயக்குவார்கள்.

அமெரிக்காவின் டெக்சாஸ் விமான நிலையத்தில் இருந்து ‘ஏர் இந்தியா ஒன்’ அணியை சேர்ந்த முதல் விமானம் இன்று பிற்பகல் டெல்லி வந்தடைந்தது. மற்றொரு விமானம் விரைவில் டெல்லி வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஏர் இந்தியா ஒன்’ விமானத்தில் ‘பாரத்’ என்றும் ‘இந்தியா’ என்றும் பெயர் எழுதப்பட்டுள்ளது. அசோகா சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. இரு விமானங்களின் விலை ரூ.8,400 கோடியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *