மகாராஷ்டிராவில் நாள்தோறும் புதிய வைரஸ் தொற்று 10 ஆயிரத்தை தொட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 799 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 905 பேர் சிகிச்சையில் உள்ளனர். 13 ஆயிரத்து 656 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. மும்பையில் வசிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராதயாவுக்கு கடந்த 12-ம் தேதி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமிதாப்பும், அபிஷேக்கும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராதயாவும் முதலில் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தனர். காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால் இருவரும் நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பத்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய்க்கும் ஆராதயாவுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இருவருக்கும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது.

இதுகுறித்து ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் இன்று வெளியிட்ட பதிவில், “எங்கள் குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. ஐஸ்வர்யா ராயும் ஆராதயாவும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நானும் எனது தந்தை அபிதாபும் மருத்துவமனையில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அபிதாபுக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. எனினும் இந்த செய்தியை அமிதாப் ட்விட்டர் வாயிலாக மறுத்துவிட்டார்.
வயது முதுமை காரணமாக அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைய அதிக நாட்களாகிறது. அவரை கவனித்து கொள்வதற்காக அபிஷேக் உடன் இருக்கிறார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.