நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், அவர்களது 8 வயது ஆராதனாவுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் (வயது 77). இவருக்கு சில நாட்களாக காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதைத் தொடர்ந்து இவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அமிதாபுக்கு கொரோனா
இதில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் வைரஸ் தொற்றிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய், 8 வயது மகள் ஆராதனா பச்சன் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
4 பங்களாவுக்கு சீல்
இதில் நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராதனா ஆகியோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. ஜெயா பச்சன், அவரது மகள் சுவேதா பச்சன் ஆகியோருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை.
அமிதாப் பச்சனுக்கு சொந்தமான 4 பங்களாக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றிய 54 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிதாப் வேண்டுகோள்
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வர்யா ராயும், ஆராதனாவும் வீட்டிலேயே சிகிச்சை பெறுகின்றனர். 4 பேரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமிதாப் பச்சன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். குடும்பத்தினரும் ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமையில் இருக்க கேட்டுக் கொள்கிறேன். கொரோனா பரிசோதனை மேற்கொள்வது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
பழைய வீடியோ
நடிகர் அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கும் தந்தைக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மும்பை மாநகராட்சியின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுகிறோம். இருவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளோம். குழப்பம் அடைய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் அமிதாப் பச்சனின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது இப்போது எடுக்கப்பட வீடியோ கிடையாது. கடந்த ஏப்ரலில் கொரோனாவுக்கு எதிராக போரிடுவோரை உற்சாகப்படுத்தும் வகையில் அமிதாப் வெளியிட்ட பழைய வீடியோவாகும்.