தொடர்கதையாகும் என்எல்சி பாய்லர் விபத்து- ஏஐடியுசி பொதுச்செயலாளர் மூர்த்தி குற்றச்சாட்டு

நெய்வேலி என்எல்சியில் பாய்லர் விபத்து தொடர்கதையாகி வருகிறது என்று ஏஐடியுசி பொதுச்செயலாளர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 1-ம் தேதி நெய்வேலி என்எல்சியின் 2-வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 23 பேர் பாதிக்கப்பட்டனர். விபத்து நேரிட்ட இடத்திலேயே 6 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன்பின் மேலும் 7 பேர் பலியாகினர்.


என்எல்சியில் பாய்லர் வெடிவிபத்து தொடர்கதையாகிவிட்டது. கடந்த மே ம் தேதி நேரிட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அதே மாதம் 9-ம் தேதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

பராமரிப்பு அவசியம்


மின் நுகர்வு குறைவாக இருக்கும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 45 நாட்களுக்கு பாய்லர்களின் இயக்கத்தை நிறுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்த பாகங்களை மாற்ற வேண்டும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 15 நாட்களுக்கு மட்டுமே பாய்லர் இயக்கத்தை நிறுத்துவதும் 10 நாட்களுக்குள் பராமரிப்பை முடித்துவிடுவதும் வழக்கமாகிவிட்டது. விபத்துகள் தொடர்ச்சியாக நடப்பது குறித்தும், உயிர்பலிகள் தொடர்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.


தற்போதைய விபத்து குறித்து என்டிபிசி முன்னாள் இயக்குநர் முகோபாத்ரா விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முன்னாள் அதிகாரி தன்னை போன்ற அதிகாரிகளை காப்பாற்ற முயல்வார் என்ற சந்தேகம் பரவலாக எழுந்திருக்கிறது.

உயர் நீதிமன்ற நீதிபதி


பாய்லர் விபத்து குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்த வேண்டும். இந்த குழுவில் ஐஐடி போன்ற தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தின் பிரதிநிதி, புகழ்பெற்ற பாய்லர் தயாரிப்பு நிறுவனமான பிஎச்இஎல் அமைப்பில் இருந்து ஒருவர், சட்ட அனுபவமுள்ள ஒருவர், என்எல்சியிலிருந்து ஓய்வுபெற்ற தொழில்நுட்ப நிர்வாகி ஆகியோர் இடம் பெற வேண்டும்.


உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ரூ.30 லட்சம் வழங்குவதாக என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் ரூ.15 லட்சத்தை மட்டுமே நிர்வாகம் வழங்கும். மீதமுள்ள ரூ.15 லட்சத்தை தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் வழங்கப்போவதாக கூறியிருப்பது மோசடியாகும்.

ஏஐடியுசி கண்டனம்


தொழிலாளர்களிடம் எவ்வித ஒப்புதலும் பெறாமல் தன்னிச்சையாக சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்வதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே மாதத்துக்கு ஒருநாள் சம்பளம் வீதம் கொரோனாவுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இது சம்பள பட்டுவாடா சட்டத்துக்கு எதிரானது. போனஸ் முன் தொகையிலும்கூட இத்தொகை பிடித்தம் செய்யப்படும் என்பது அடாவடி நடவடிக்கையாகும். இதை ஏஐடியுசி வன்மையாக கண்டிக்கிறது.


என்எல்சி உயிர்வதை செய்யும் கொலைக்களமாக மாறுகிறது. உயிரிழந்தவர்களுக்கு தொழிலாளிதான் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது அநீதியாகும். இதற்கு எதிராக நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும்” என்று ஏஐடியுசி பொதுச்செயலாளர் மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *