கார், பைக் விற்பனையை அதிகரிக்க பொது போக்குவரத்து முடக்கமா? – தமிழக அரசுக்கு ஏஐடியுசி கேள்வி

கார், பைக் விற்பனையை அதிகரிப்பதற்காக பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறதா என்று தமிழக அரசுக்கு ஏஐடியுசி கேள்வி எழுப்பியுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை:

ஆயிரத்தில் 2 பேருக்கு தொற்று


தமிழகத்தில் பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. கால் டாக்ஸி ஆட்டோ, சொந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் 20 பேர் வரை ஏற்றக்கூடிய டெம்போ டிராவலர் மற்றும் சிறிய வாகனங்கள் அரசு அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகின்றன.


பிற மாநிலங்களில், பயணிகள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாடுகளில், பொதுப் போக்குவரத்து மூலம் இந்த நோய் தொற்று பரவுகிறதா என்பதை ஆய்வு செய்தபோது, ஆயிரத்தில் 2 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

சானிடைசர்,கிருமிநாசினி


அரசுஅறிவுறுத்தலின்படி கைகள் படும் இடங்களில் சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துவது மூலமும் ஒவ்வொரு பயண முடிவின்போதும் பேருந்தின் உட்புறம் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துவதன் மூலமும் நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும். மற்ற நாடுகளிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


நூறு சதவீத பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. சாதாரண அடித்தட்டு மக்கள் வசிப்பிடத்தில் இருந்து வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. வாங்கும் சம்பளம் அனைத்தையும் பயணத்துக்காக செலவிட முடியாது. பொது போக்குவரத்தை நம்பித்தான் அவர்கள் பயணம் மேற்கொள்ள முடியும்.

மக்களின் சந்தேகம்

தனி வாகனங்களில் செல்ல ஊக்கப்படுத்துவது கடுமையான போக்குவரத்து நெருக்கடியை உருவாக்கும். வாகன எண்ணிக்கை பெருகி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மக்களுக்கான பொது போக்குவரத்து சேவை என்பது அவசியமாகிறது.
கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதா என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

எனவே, சுகாதாரமான நடவடிக்கைகளை கடைபிடித்து பயணிகள் பேருந்து போக்குவரத்து இயக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *