மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு – அம்பத்தூரில் மீண்டும் அலெக்ஸாண்டர்

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதனால் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சி தலைமையிடம் சீட் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

அமைச்சர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் தொகுதி வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்பதை விவரிக்கிறது இந்தச் செய்தி. திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருப்பவர் அதிமுகவின் மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர். இவர் அம்பத்தூர் தொகுதியில் என்னென்ன வளர்ச்சி பணிகளைச் செய்திருக்கிறார் என்று களஆய்வு மேற்கொண்டோம்.

தொகுதி மறுசீரமைப்பில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி உருவானது. இந்தத் தொகுதிக்குள் பாடி, கொரட்டூர், கொளத்தூர், வில்லிவாக்கம், முகப்பேர் கிழக்கு, அயப்பாக்கம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் தொழிற்பேட்டைதான் அம்பத்தூர் தொகுதியின் முக்கிய அம்சம். தொழில் நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்தத் தொகுதியில் அதிகம். தற்போது தொழில் நிறுவனங்கள் ஐடி நிறுவனங்களான மாறியிருக்கின்றன. அதோடு மாநகராட்சியோடு அம்பத்தூர் நகராட்சி இணைக்கப்பட்ட பிறகு மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்துள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் இந்தத் தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாத இடங்களில் பணிகள் நடந்துவருகின்றன. அம்பத்தூர் தொகுதியின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஏரிகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக அம்பத்தூர் கொரட்டூர் ஏரிகள் இந்தத் தொகுதியின் நிலத்தடி நீர்மட்டத்துக்கு உறுதுணையாக இருந்துவருகிறது.

இந்தத் தொகுதி, கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் காங்கிரஸ் வேட்பாளர் அசனை எதிர்த்து அதிமுக வேட்பாளர் அலெக்ஸாண்டர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அம்பத்தூர் தொகுதியில் செயல்படும் அரசு அலுவலகங்களுக்கு சொந்தக்கட்டடங்களைக் கட்டி கொடுத்திருக்கிறார். குறிப்பாக காவல்துறை இணை கமிஷனர் அலுவலகம் சொந்தக்கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது. அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏவால் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் அம்பத்தூருக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சிவில் சப்ளை உதவி கமிஷனர் அலுவலகமும் அம்பத்தூரிலேயே செயல்பட்டு வருகிறது. அதனால் மக்கள் அம்பத்தூரிலிருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டியதில்லை. ஆர்.டி.ஓ அலுவலகமும் தீயணைப்பு துறையில் அம்பத்தூர் தனி மாவட்டமாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது. வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த சார்-பதிவாளர் அலுவலகம், அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏவால் சொந்தக்கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

தொகுதி முழுவதும் 360 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டிருக்கின்றன. கொரட்டூர் கேனால் சாலையில் 18 கோடி ரூபாய்க்கு கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது. 30 கோடி ரூபாயில் 15 நீர்நிலை பகுதிகள் பராமரிக்கப்பட்டு பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகளில் ஆய்வக வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொரட்டூர் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. அனைத்து தெரு விளக்குகளும் எல்இடியாக மாற்றப்பட்டிருக்கிறது. 7 பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணிகள் நடந்துள்ளன. மண்ணூர்பேட்டையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. 352 கோடி ரூபாயில் பூமிக்கடியில் மின்வழித்தட பாதை அமைக்க டென்டர் விடப்பட்டிருக்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. . பாதாள சாக்கடைப் பணிகள், குடிநீர் பணிகள் 90 சதவிகிதத்துக்கு மேல் நிறைவடைந்திருக்கின்றன.

தொகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படிருக்கிறது. கொரட்டூர் ஏரி பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 வழித்தடங்களில் மக்களுக்காக மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா காலக்கட்டத்தில் 700 டன் அரிசி, மளிகை பொருள்கள் என மக்களுக்கு தேவையான உதவிகளை அலெக்ஸாண்டர் எம்எல்ஏ செய்து கொடுத்திருக்கிறார். குப்பை இல்லாத தொகுதியாக அம்பத்தூர் தொகுதி மாறியிருக்கிறது. அதோடு தொகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு கொடுங்கையூருக்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி ஆகியவற்றில் ஜெயலலிதா அவர்களின் கனவுத்திட்டங்களுக்கான பணிகள் நடந்துவருகின்றன. தேர்தல் வாக்குறுதியில் கிட்டதட்ட 95 சதவிகித்துக்கு மேல் நிறைவேற்றப்பட்டிருப்பதால் அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏவுக்கு தொகுதி மக்களிடையே அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. அதோடு அவரின் சிரித்த முகம், கள்ளகபடமற்ற பேச்சு, ஆளுங்கட்சியின் சிறப்பான ஆட்சி ஆகிய மூன்றும் அலெக்ஸாண்டருக்கு தொகுதியில் ப்ளஸாக இருந்துவருகிறது.

இந்தத் தொகுதியை பொறுத்தவரை அதிமுக சார்பில் மீண்டும் அலெக்ஸாண்டே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு நடவடிக்கை எடுத்ததால் தொகுதிக்குள் அலெக்ஸாண்டருக்கு நல்ல பெயர் உள்ளது.

அதோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையிலான ஆட்சியின் நலத்திட்ட உதவிகளால் மக்கள் பெரிதும் பயனடைந்திருக்கின்றனர்.

குறிப்பாக ஆளுங்கட்சியினர் அறிவித்த பொங்கல் பரிசு தொகைக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் அம்பத்தூர் தொகுதியில் மீண்டும் இரட்டை இலையே துளிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *