சென்னையில் காதலியை சந்திக்க வந்த காதலன்- 75 அடி ஆழ கிணற்றில் விழுந்த பரிதாபம்-அதிர்ச்சி வீடியோ

சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் ஜிலான் (22). அங்குள்ள செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார்.

செல்போன் கடைக்கு வந்த அதே பகுதியை கல்லூரி மாணவிக்கும் ஜிலானுக்கும் பழக்கமாகி, வழக்கமாகி, காதலானது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே காதலியை சந்திக்க முடியாமல் ஜிலான் பரிதவிப்பில் இருந்துள்ளார்.

பின்பக்க சுவர் ஏறி..


கடந்த புதன்கிழமை நண்பனின் பிறந்தநாள் விழாவுக்காக காதலி குடியிருக்கும் பகுதிக்கு ஜிலான் சென்றுள்ளார். இரவில் வீட்டுக்கு திரும்பியபோது காதலிக்கு போன் செய்தார். உன் வீட்டின் அருகில் நிற்கிறேன், நிற்கட்டுமா, போகட்டுமா என்று கொஞ்சலாக பேசியுள்ளார்.


நீண்டநாட்கள் காதலனை பார்க்காத ஏக்கத்தில் இருந்த காதலி, யாருக்கும் தெரியாமல் பின்பக்கம் வழியாக வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார். அவரை பார்க்கும் ஆவலில் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்பக்க சுவரில் ஏறி வீட்டுக்குள் ஜிலான் குதித்துள்ளார்.

திருடன்..திருடன்…


இதை பார்த்த அந்தப் பகுதி மக்கள் திருடன்…திருடன் என்று கூறி விரட்டியுள்ளனர். பயந்து போன ஜிலான் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது காதலியின் வீட்டு பாழும் கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். திருடனை கண்டுபிடிக்க முடியாத மக்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.


75 அடி ஆழம் கொண்ட பாழும் கிணறு என்பதால் உள்ளே விழுந்த ஜிலானுக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறிது நேரத்தில் வலி தாங்க முடியாமல், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அலறியுள்ளார்.

தீயணைப்பு வீரர்கள்

அவரது அலறல் கேட்டு காதலியின் குடும்பத்தினர் கிணற்று பகுதிக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர் கிணற்றில் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி ஜிலானை மீட்டனர்.

தீவிர சிகிச்சை


அவரிடம் விசாரித்தபோது காதலியைப் பார்க்க வந்து பாழும் கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


அம்பத்தூர் பகுதி வீடுகளில் கிணறுகள் அதிகம். நள்ளிரவில் திருட வரும் கொள்ளையர்கள் கிணற்றில் தவறி விழுவதும் சில நாட்களுக்குப் பிறகு போலீஸார் அவர்களை மீட்பதும் வழக்கம். இந்த முறை சற்று வித்தியாசமாக காதல் திருடர் கிணற்றில் தவறி விழுந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *