மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லி அருகே குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

டெல்லி அருகே மேதாந்தாவில் அமைந்துள்ள மருத்துவமனை.


இந்த வரிசையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் (வயது 55) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவனையில் இன்று பிற்பகல் அவர் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையின் 14-வது தளத்தில் உள்ள தனி அறை அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


ட்விட்டரில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் இருந்தன. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல்நிலை சீராக உள்ளது. எனினும் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறேன். கடந்த சில நாட்களில் என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

லோகமானிய திலகரின் நினைவு தினம் டெல்லியில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.


புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த வாரம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அமித் ஷாவும் பங்கேற்றார். கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.


வரும் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறுகிறது. இதில் அமித் ஷா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *