சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு எதிராக ஆந்திர முதல்வர் புகார் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஓய்வு பெறுகிறார்.
பணிமூப்பின் அடிப்படையில் அவருக்கு அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமை நீதிபதியாக பதவியேற்க வேண்டும்.
இந்த பின்னணியில் நீதிபதி என்.வி. ரமணாவுக்கு எதிராக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கு அவர் விரிவான கடிதமும் எழுதியுள்ளார்.
எட்டு பக்கங்கள் கொண்ட இந்த கடிதத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முதன்மை ஆலோசகர் அஜேயா கல்லம், விஜயவாடாவில் நேற்று வெளியிட்டார்.
“தெலுங்கு தேசம் கட்சிக்கும் நீதிபதி ரமணாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் ரமணாவின் 2 மகள்களுக்கு அமராவதியில் சட்டவிரோதமாக நிலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக நீதிபதி ரமணா காய் நகர்த்துகிறார்.
ஆந்திர ஐகோர்ட்டின் செயல்பாடுகளில் நீதிபதி ரமணா தலையிடுகிறார். நீதித் துறையின் நடுநிலைத்தன்மையை தலைமை நீதிபதி உறுதி செய்ய வேண்டும்” என்று கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் தரப்பில் அவரது முதன்மை ஆலோசகர் அஜேயா கல்லம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
அதில், “ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் 18 மாத ஆட்சியில் அரசு திட்டங்களுக்கு எதிராக ஐகோர்ட் 100 உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணாவுக்கு எதிரான ஆதாரங்களை தலைமை நீதிபதி பாப்டேவிடம் சமர்ப்பித்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000 முதல் 2013 வரை ஆந்திர ஐகோர்ட் நீதிபதியாகவும், 2013 முதல் 2014 வரை டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய ரமணா, கடந்த 2014 பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார்.