ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றன. கடந்த மே 7-ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் விஷ வாசி கசிந்து 12-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
சுமார் 5 கிராமங்களில் தண்ணீர், காற்று, நிலம் மாசடைந்துள்ளது.
இந்த விபத்து நேரிட்டு 2 மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்டில் இன்று மதியம் மிகப்பெரிய விபத்து நேரிட்டுள்ளது.
பொருட்களை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படும் பிரம்மாண்ட கிரேன் முறிந்து சரிந்து விழுந்தது. இதில் 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நகர போலீஸ் கமிஷனர் ஆர்.கே.மீனா நேரடியாக சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
விபத்து குறித்து தொழிற்சங்க பிரதிநிதி குமார் என்பவர் கூறுகையில், “இந்துஸ்தான் ஷிப்யார்டில் புதிதாக கிரேன் வாங்கப்பட்டுள்ளது.
அதை பரிசோதிக்கும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுவனம் செய்யவில்லை. இதன்காரணமாகவே உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன” என்று குற்றம்சாட்டியுள்ளார்.