அண்ணா பல்கலை.யில் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படுகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
பொறியியல் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களில் 74 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் நம்பிக்கைமிக்க கல்வி நிறுவனங்களாக ஐஐடி செயல்பட்டு வருகிறது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் ஐஐடி கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக கூறலாம். ஆனால் அங்குகூட கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடியில் படித்த 6 மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அவர்களை பணிக்கு எடுத்த நிறுவனங்கள், வேலையில் சேர்க்க மறுத்துவிட்டன. கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பே இதற்கு காரணம் என்று நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஐஐடி மும்பையில் இதுபோன்ற நிலைமை ஏற்படவில்லை. ஆனால் பணிக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐஐடி கவுகாத்தியிலும் இதே நிலைமைதான் உள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஐடி கவுகாத்தியில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், வீட்டிலிருந்து பணிபுரிய வாய்ப்பு உள்ளதா என ஐஐடி நிர்வாகம் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மாற்று வழியை தேடும் மாணவர்கள், இணையதளம் வாயிலாக தங்களுக்கான வேலைவாய்ப்பை தேடி வருகின்றனர்.
மாணவர்களின் சிரமம், தேவையை உணர்ந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் மாணவ, மாணவருக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடத்த திட்டமிட்டுள்ளது.
அண்ணா பல்கலை. வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை தொழில் நுட்ப கல்லூரி, கட்டிட வடிவமைப்பு கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் படிக்கும் மாணவ, மாணவியருக்காக ஆண்டுதோறும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படுவது வழக்கம்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ ஆன்லைனில் நடத்தப்படுகிறது.
முதல்கட்ட கேம்பஸ் இன்டர்வியூ செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்க இதுவரை 3,300 மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர்.
முதல்கட்ட கேம்பஸ் இன்டர்வியூவில் 25 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் முதல் 28 லட்சம் வரை சம்பளம் வழங்குகின்றன.
இரண்டாம் கட்ட கேம்பஸ் இன்டர்வியூ வரும் அக்டோபரில் தொடங்கப்பட உள்ளது. இதில் 45 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடி்ககையை மாணவ, மாணவியர் வரவேற்றுள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் செயல்படும் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் கேம்பஸ் இன்டர்வியூவை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.