உன்னை வயலுக்கு மாமா அழைத்துவரச் சொன்னார்' என்று விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி சிறுமி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினரின் 7-வயது மகள் கடந்த 30-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அவர் திடீரென மாயமாகினார். பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். சிறுமியை போலீசார் தேடியபோது வீட்டின் பின் பகுதியில் 200 மீட்டர் தொலைவில் தண்ணீர் இல்லாத குளத்தில் அடர்ந்த செடிகளுக்குள் சிறுமி ரத்தக் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் தலை, முகத்தில் ரத்த காயங்கள் இருந்தன.
புதுக்கோட்டை எஸ்.பி அருண்சக்திகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்தனர் .விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பாலியல் வன்கொடுமை
சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் ராஜா என்கிற ராஜேஷ் (29) என்பவரைச் சந்தேகத்தின் பேரில் விசாரித்தோம். இவர் அந்தப்பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததை அவர் ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.
சிறுமி கொலை வழக்கில் ராஜேஷின் நண்பருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என புதுக்கோட்டை மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
மாமா அழைத்தார்
சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த ராஜேஷ், உன்னுடைய மாமா வயலில் நிற்கிறார். அவர் உன்னை அங்கு அழைத்து வரச்சொன்னார் என்று கூறியுள்ளார். ராஜேஷின் பேச்சை நம்பிய சிறுமியும் அவருடன் சென்றுள்ளார். வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்தில் கோடை காலம் என்பதால் தண்ணீர் இல்லை. மேலும் குளத்தில் செடிகள் அடர்ந்து காணப்பட்டுள்ளது.
குளத்தை தாண்டியுள்ள வயலில்தான் மாமா இருக்கிறார் என்று கூறிய சிறுமியை அவ்வழியாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியிடம் அவர் தவறாக நடந்துள்ளார். வெளியில் தன்னைப்பற்றி கூறிவிடுவார் என்ற பயத்தில் சிறுமியை அவர் கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காது போல இருந்துள்ளார். அவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்து விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்துள்ளது.
போக்ஸோ, கொலை வழக்கு
ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் முடங்கி கிடக்கின்றனர். மேலும் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவ, மாணவிகளும் வீட்டிலேயே இருக்கின்றனர். இந்தச் சமயத்தில்தான் தனியாக இருந்த சிறுமிக்கு இப்படியொரு சோகம் சம்பவம் நடந்துள்ளது.
போக்ஸோ சட்டம் மற்றும் கொலை வழக்கை பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்ட போலீசார், கைதான இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர் பிரேத பரிசோதனைக்குப்பிறகு சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு ஹேஸ்டேக் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
முதல்வர் இரங்கல்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,
அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தச் சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் ட்விட்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக் காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது.பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது. இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில், பால்மணம் மாறாத 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது மனதை உலுக்குகிறது
சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைந்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.