கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதன்காரணமாக கடந்த 5, 6-ம் தேதிகளில் இருநாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 40 வீரர்களும்பலியாகி உள்ளனர். எனினும் 2 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக சீனா மழுப்பி வருகிறது.

இந்த மோதலை தொடர்ந்து டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. சீன முதலீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த பின்னணியில் லடாக் போன்று வடக்கிழக்கின் அருணாச்சல் பிரதேச பகுதியில் சீன வீரர்கள் அத்துமீற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதைத் தொடர்ந்து ராணுவ தளபதி நாராவனே வடகிழக்கு எல்லைப் பகுதிக்கு விரைந்துள்ளார்.
எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மூத்த தளபதிகளுடன், நாராவனே முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

லடாக் எல்லையில் சீனாவுடன் பிரச்சினை எழுந்தபோதே சீன எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கடந்த 2017-ம் ஆண்டில் சிக்கிமின் டோக்லாம் பகுதியில் சீனா குடைச்சல் கொடுத்தது. இந்திய ராணுவத்தின் எதிர்ப்பால் 72 நாட்களுக்குப் பிறகு சீன ராணுவம் பின்வாங்கியது.
இப்போதும் அதே அணுகுமுறையை கடைப்பிடிக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
சீனாவின் கொட்டத்தை அடக்க தென்சீனக் கடலில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களை குவித்து வருகிறது. சர்வதேச அரங்கில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன.