அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது.. ஐகோர்ட்டில் யுஜிசி வாதம்…
அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று ஐகோர்ட்டில் யுஜிசி வாதிட்டது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் இறுதியில் கல்லூரிகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் செயல்படும் பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வுகள் தவிர்த்து அரியர் உள்ளிட்ட அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
கலை-அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட், தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தாக்கல் செய்த பதில் மனுவில், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்குப் புறம்பானது என தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பதில் மனுவில், கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது. அரியர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதான வழக்கு 20-ம் தேதி விசாரிக்கப்படுகிறது. அப்போது இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.