அரியர் தேர்வு ரத்து செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான சென்னை ஐகோர்ட்டின் முடிவை மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை.
தமிழகத்தில் பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வுகள் தவிர்த்து அரியர் உள்ளிட்ட அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தாக்கல் செய்த மனுவில், அரியர் தேர்வுகள் ரத்து என்பது எங்களது விதிகளுக்கு முரணானது.
அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “இந்த விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது.
தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம் ” என்று கேள்வி எழுப்பினர்.
வழக்கின் அடுத்த விசாரணை வரும் நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.