மீண்டும் இணைந்த கைகள்.. முதல்வர் கெலாட்டுடன் பைலட் சந்திப்பு…

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் கடந்த மாதம் போர்க்கொடி உயர்த்தினார். அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் தனி அணியாக செயல்பட்டனர். இதைத் தொடர்ந்து சச்சினின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.


அவர் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, சச்சின் பைலட் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார்.

ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட், கட்சியின் மூத்த தலைவர்கள்.
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட், கட்சியின் மூத்த தலைவர்கள்.

இதைத் தொடர்ந்து நேற்று அவர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு திரும்பினார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் ஜெய்ப்பூரில் இன்று மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினர்.
முதல்வர் அசோக் கெலாட் பேசும்போது, “பழைய கெட்ட கனவு மறைந்துவிட்டது.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது” என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் சச்சின் பைலட் எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள பார்மோன்ட் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்குகிறது.

முதல்வர் அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் வெற்றி சின்னத்தை காண்பித்தனர்.
முதல்வர் அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் வெற்றி சின்னத்தை காண்பித்தனர்.

இதில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிகிறது.
சச்சின் பைலட் காங்கிரஸுக்கு திரும்பி வந்திருப்பதால் அந்த கட்சியின் பலம் மீண்டும் 107 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 10 சுயேச்சை எம்எல்ஏக்ளும் சிறிய கட்சிகளை சேர்ந்த 4 எம்எல்ஏக்களும் அரசை ஆதரிக்கின்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *