ஆசிய-பசிபிக்கின் வல்லரசு எது?

ஆசிய-பசிபிக் பிராந்திய வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. சீனா, ஜப்பான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லோவி இன்ஸ்டிடியூட் ஆண்டுதோறும் ஆசிய-பசிபிக் பிராந்திய வல்லரசு நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

பொருளாதார வளர்ச்சி, ராணுவ பலம், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சக்தி, எதிர்காலத்துக்கான வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு கட்டமைப்புகள், ராஜ்ஜிய, கலாச்சார உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகள்  பட்டியிடப்படுகின்றன. 

இதன்படி 2020-ம் ஆண்டுக்கான ‘லோவி இன்ஸ்டிடியூட் ஆசிய வல்லரசு குறியீடு’  நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

மொத்தம் 26 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 81.6 சதவீத புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 76.1 சதவீத புள்ளிகளுடன் சீனா 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. 41 சதவீத புள்ளிகளுடன் ஜப்பான் 3-வது இடத்திலும் 39.7 சதவீத புள்ளிகளுடன் இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன.

இந்தியா குறித்து லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இந்தியாவின் ராஜ்ஜியரீதியான உறவுகள் மேம்பட்டுள்ளன. இதேபோல பாதுகாப்பு சார்ந்த கூட்டணிகள் வலுவடைந்துள்ளன.  ‘குவாட்’ கூட்டணியின் முக்கிய அங்கமாக இந்தியா திகழ்கிறது. எனினும் இந்தியாவின் வர்த்தக தொடர்புகள் பின்னடைவை சந்தித்துள்ளன. அண்டை நாடான நேபாளம்கூட சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யா 33.5%, ஆஸ்திரேலியா 32.4%, தென்கொரியா 31.6%, சிங்கப்பூர் 27.4%, தாய்லாந்து 20.8%, மலேசியா 20.7%, இந்தோனேசியா 19.9%, வியட்நாம் 19.2%, நியூசிலாந்து 19%, தைவான் 16.7%, பாகிஸ்தான் 15.2%, பிலிப்பைன்ஸ் 13.3%, வடகொரியா 12.3%, வங்கதேசம் 9.2%, புருணே 9.1%, மியான்மர் 8.7%, இலங்கை 8.3%, கம்போடியா 7.3%, லாவோஸ் 6%, மங்கோலியா 5.6%, நேபாளம் 4.4%, பப்புவா நியூ கினியா 3.8 சதவீத புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதுகுறித்து லோவி இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி பிரிவு தலைவர் ஹார்வி கூறியதாவது:

கரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதால் அமெரிக்கா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பொருளாதார சரிவில் இருந்து அமெரிக்கா மீண்டு வர சில ஆண்டுகள் ஆகலாம். வரும் 2024-க்குப் பிறகே அந்த நாடு மீட்சி அடைய வாய்ப்புள்ளது.

அதேநேரம் சீனா நடப்பாண்டிலேயே பொருளாதார சரிவில் இருந்து மீண்டுவிட்டது. இதன்காரணமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு பொருளாதாரரீதியாக சீனா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையான சக்தியாக சீனா உருவெடுக்கும். ஒருவேளை அமெரிக்காவைவிட மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது.

வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால் ஆசிய நாடுகள், அமெரிக்காவுடன் இணையாமல் தனித்து செயல்படக்கூடும். அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் அமெரிக்காவுடன் ஆசிய நாடுகள் விருப்பத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.

கரோனா வைரஸால் எழுந்த நெருக்கடியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் எதிர்விளைவாக அண்டை நாடான சீனா எழுச்சி அடையும். கரோனா வைரஸால் எழுந்துள்ள நெருக்கடியால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பது தாமதமாகும். தற்போது தெற்காசியாவில் வறுமை அதிகரித்து வருகிறது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

 இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *