உலகின் மிக நீளமான ‘அடல்’ சுரங்கப் பாதை…

உலகின் மிக நீளமான ‘அடல்’ சுரங்கப் பாதை… யை பிரதமர் நரேந்திர மோடிஇன்று திறந்துவைத்தார்.

இமாச்சல பிரதேசம் மாநிலம், லடாக் யூனியன் பிரதேசம்  சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளன.   லடாக்கின் லே நகரில் இருந்து இமாச்சல பிரதேசத்தின் மணாலியை இணைக்கும் வகையில் 475 கி.மீ. தொலைவுக்கு லே-மணாலி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் குளிர்காலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக 6 மாதங்கள் இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபடும். இது ராணுவ வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

இதை கருத்தில் கொண்டு லே-மணாலி நெடுஞ்சாலையில் இமாச்சல பிரதேசத்தின் மணாலி, லாஹாவ்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் வகையில்  மலையைக் குடைந்து 9.02 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்க கடந்த 1990-ல் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

2010-ல் அடிக்கல்

பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு கடந்த 2010 ஜூன் 28-ம் தேதி சுரங்கப் பாதைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 10 ஆண்டுகளில் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இது உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையாகும்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக ‘அடல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.

'அடல்' சுரங்கப் பாதை
‘அடல்’ சுரங்கப் பாதை

இமாச்சல பிரதேசத்தின் ரோட்டங் நகரில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்புறையாற்றினார்.

“அடல் சுரங்கப் பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் வாஜ்பாயின் கனவு, நனவாகி உள்ளது. இமாச்சல பிரதேச மக்களின் நீண்டகால விருப்பம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இம்மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பெரிய நகரங்களின் சந்தைகளில் ஆண்டு முழுவதும் வர்த்தகம் செய்ய வழிவகை பிறந்துள்ளது.

உலகத் தரத்துக்கு இணையாக ‘அடல்’ சுரங்கப் பாதை கட்டப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த இன்ஜினீயர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்”  என்று பிரதமர் மோடி பேசினார்.

குகை பாதை திறப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நராவனே, இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நதியின் கீழே குகைப் பாதை

லே-மணாலி நெடுஞ்சாலையின் ரோட்டங் பகுதியில் மலையை சுற்றிச் செல்ல சுமார் 4 மணி முதல் 5 மணி நேரமானது. ‘அடல்’ சுரங்கப் பாதையின் மூலம் இனிமேல் 10 நிமிடங்களில் இப்பகுதியைக் கடந்து செல்ல முடியும். இந்த பாதையில் தினமும் 3,000 கார்கள், 1,500 லாரிகள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

‘அடல்’ சுரங்கப் பாதைக்கு மேலே ‘செரி நல்லா’ என்ற நதி பாய்கிறது. சாலை கட்டுமான பணியின்போது இந்த நதியில் இருந்து தண்ணீர் குகைக்குள் பாய்ந்தது. நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு குகை பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *