சென்னை ஆவடி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் இளங்குமரன். இவரின் மகள் திவ்யா (18), போரூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த ஜூலை 2-ம் தேதி 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர். திவ்யாவின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆவடி போலீசார் கூறுகையில், இளங்குமரன், ஆவடி ஹெச்விஎப்-பில் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் ஓரே மகள் திவ்யா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இளங்குமரனின் மனைவி பிரிந்துச் சென்றுவிட்டாள். அதனால் மகளுடன் இளங்குமரன் குடியிருந்து வந்தார். ஆவடியில் உள்ள பெண்கள் விடுதியில் திவ்யா தங்கியிருந்தாள்.
கடந்த மாதம் வீட்டுக்கு வந்த திவ்யா, செல்போனில் ஆண் நண்பருடன் நீண்ட நேரமாக பேசிக் கொண்டே இருந்துள்ளார். அதை இளங்குமரன் கண்டித்ததோடு நம்முடைய குடும்ப சூழல் உனக்கு நன்றாக தெரியும். அம்மா இல்லாத பிள்ளையாக நீ இருக்கிறாய். உனக்காகத்தான் நான் உயிரோடு இருக்கிறேன்.
நீ படித்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என திவ்யாவுக்கு இளங்குமரன் அறிவுரை கூறியுள்ளார். அதைக் கேட்ட திவ்யா, ஆண் நண்பருடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.கடந்த ஜூலை 1-ம் தேதி விடுதிக்குச் சென்றுள்ளார் திவ்யா. கடந்த 2-ம் தேதி விடுதியின் 3-வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார் என்றனர்.
காதலா, தந்தையின் பாசமா என்ற குழப்பதில் மாணவி இந்த முடிவை எடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவி தங்கியிருந்த அறை, அவரின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.