ஆவடி, காமாராஜர் நகர், புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 42). பட்டதாரியான இவர் வேலையின்றி அவதிப்பட்டு வந்துள்ளார்.
வாழ்வாதாரத்துக்காக ராஜஸ்தானை சேர்ந்த www.patangdoori.com இணையதள முகவரியில் பட்டங்கள், மாஞ்சா நூல் உள்ளிட்டவற்றை வாங்கி விற்று வந்துள்ளார்.
இந்த இணையத்தில் 20 பட்டங்கள் ரூ.1400 முதல் ரூ.2000 வரையும் மாஞ்சா நூல்கண்டுகள் ரூ.1199 முதல் ரூ.2499 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இணையத்தில் ஆர்டர் செய்ததும் ராஜஸ்தானில் இருந்து ‘கொரியர்’ வாயிலாக அவருக்கு பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு பட்டத்தை ரூ.100-க்கு அன்பரசு விற்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 110 பட்டங்கள், மாஞ்சா நூல்கண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”பட்டம் விடுவது தவறல்ல. ஆனால் மாஞ்சா நூலால் பட்டம் விடுவது சட்டப்படி குற்றம்” என்றனர்.