அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ராமர் கோயில் கட்டுவதற்கான சிறப்பு பூஜை அயோத்தியில் நடைபெற்றது. எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கோயில் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. வரும் 18-ம் தேதி அறக்கட்டளையின் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் முறைப்படி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்குவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கட்டுமானப் பணிகளை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அறக்கட்டளையின் தலைவர் கோபால் தாஸ் பிரதமர் மோடிக்கு அண்மையில் கடிதம் எழுதினார். இதையேற்று வரும் ஆகஸ்ட் 3 அல்லது ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடி அயோத்திக்கு நேரில் சென்று ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.