பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், அயோத்தியில் முகலாய மன்னர் பாபர் பெயரில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி கடந்த 1992 டிசம்பர் 6-ம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாபர் மசூதியை மையமாகக் கொண்டு 2 வழக்குகள் தொடரப்பட்டது.

நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக சிவில் வழக்கும், மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

நிலம் தொடர்பான வழக்கில் கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

மசூதி இடிப்பு வழக்கு

மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அன்றைய தினம் மேடையில் இருந்த அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது தனி வழக்கும், கரசேவகர்கள் மீது தனி வழக்கும் பதிவு செய்யப்பட்டன.

முதலில் உத்தர பிரதேச போலீஸார் விசாரித்த இந்த வழக்குகள் பின்னர் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டன.

அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கு ரே பரேலி சிறப்பு நீதிமன்றத்திலும் கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்திலும் நடைபெற்றது.

கடந்த 2001-ம் ஆண்டில் ரே பரேலி சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட் 2010-ல் உறுதி செய்தது. இதை எதிர்த்து சிபிஐ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அத்வானி, உமா பாரதி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அத்வானி, உமா பாரதி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி

சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரே பரேலி நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது. மேலும் பிரிக்கப்பட்ட 2 வழக்குகளையும் ஒன்றாக இணைத்து லக்னோ நீதிமன்றத்தில் ஒரே வழக்காக விசாரிக்க கடந்த 2017-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் அறிவுறுத்தியது.

எனினும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று உச்ச நீதிமன்றம் பலமுறை கால அவகாசத்தை நீட்டித்தது.

பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட மொத்தம் 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, விஎச்பி முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் உட்பட 17 பேர் வழக்கு விசாரணையின்போதே உயிரிழந்துவிட்டனர்.

எஞ்சிய 32 பேர் மீதான வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

32 பேர் வாக்குமூலம்

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கத்தியார், சாத்வி ரிதம்பரா, மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், ராம் விலாஸ் வேதாந்தி, சம்பத் ராய், மஹந்த் தர்மதாஸ்,

சதீஷ் பிரதான், பவண் குமார் பாண்டே, லாலு சிங், பிரகாஷ் சர்மா, விஜய் பகதூர் சிங், சந்தோஷ் துபே, காந்தி யாதவ், ராம்ஜி குப்தா, பிராஜ் பூஷண் சரண் சிங், கமலேஷ் திரிபாதி,

ராமசந்திர கத்ரி, ஜெய் பகவான் கோயல், ஓம் பிரகாஷ் பாண்டே, அமர்நாத் கோயல், ஜெய்பான் சிங் பூவய்யா, சாக்சி மகராஜ், வினய் குமார் ராய், நவீன் பாய் சுக்லா,

ஆர்.என்.ஸ்ரீவஸ்தவா, ஆச்சார்ய தர்மேந்திர தேவ், சுதிர் குமார் காகர், தர்மேந்திர சிங் குஜ்ஜார் ஆகிய 32 பேரிடமும் நீதிபதி எஸ்.கே.யாதவ் தனித்தனியாக வாக்குமூலம் பெற்றார்.

கொZரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஜூலை 24-ம் தேதி எல்.கே.அத்வானி காணொலி வாயிலாக நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார்.

மொத்தம் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இம்மாத தொடக்கத்தில் விசாரணை நிறைவு பெற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி எஸ்.கே.யாதவ்
தீர்ப்பை வழங்கிய நீதிபதி எஸ்.கே.யாதவ்

2,300 பக்க தீர்ப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி எஸ்.கே.யாதவ் 2300 பக்க தீர்ப்பின் முக்கிய பகுதிகளை வாசித்தார்.

“வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 32 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சிபிஐ தாக்கல் செய்யவில்லை. பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட செயல் இல்லை. இந்த சம்பவம் திடீரென நடந்துள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் பாபர் மசூதியை இடித்துள்ளனர். அவர்கள் தேசவிரோதிகள் என்பதில் சந்தேகமில்லை.

மசூதியை இடித்தவர்களை எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஷோஜி, அசோக் சிங்கால் உள்ளிட்டோர் தடுத்துள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாபர் மசூதி இடிப்பில் தொடர்பில்லை.

அன்றைய உத்தர பிரதேச முதல்வர் கல்யாண் சிங் தனது கடமையை செய்ய தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை. சம்பவ இடத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் லட்சக்கணக்கான கரசேவர்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் உள்ளூர் தலைவர் நஸ்ரத், பாபர் மசூதி இடிப்பை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்.

அவரது வாக்குமூலம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. அவர் தனது குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

பெரும்பாலான சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது புழுதிமயமாக இருந்தது. யார் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

நாளிதழ்களில் எழுதப்பட்ட செய்திகள், கட்டுரைகளை ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையான புகைப்படங்கள், வீடியோக்களை மட்டுமே ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ள முடியும்.

சிபிஐ தாக்கல் செய்த ஆடியோ, வீடியோ பதிவுகளின் உண்மைதன்மை உறுதி செய்யப்படவில்லை. அவற்றை ஆதாரங்களாக ஏற்க முடியாது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யலாம்” என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொலி வாயிலாக ஆஜர்

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரில் 26 பேர் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகினர்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உமா பாரதிக்கு சில நாட்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்து காணொலி வாயிலாக அவர் பங்கேற்றார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து உத்தர பிரதேசம் முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தலைநகர் லக்னோவில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உத்தர பிரதேசம் மட்டுமன்றி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *