தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பிளஸ் 2 தேர்வை வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலையில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நடத்தப்படும்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்சினையால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது காலதாமதமாகி வருகிறது. இதனால் பொறியியல் கலந்தாய்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் கலந்தாய்வை நடத்துவது தொடர்பாக உயர் கல்வித் துறை மூத்த அதிகாரிகளின் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதில் ஆகஸ்ட் இறுதியில் பொறியியல் கலந்தாய்வை தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பர் மத்தியில் பொறியியல் வகுப்புகள் தொடங்கப்படலாம். எனினும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று உயர் கல்வித் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.