லெபனானில் வெடித்தது அணு குண்டா? 100 பேர் உடல் சிதறி பலி.. 5,000 பேர் உயிர் ஊசல்..ரத்த களறி படங்கள்..வீடியோ..

மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள சிறிய நாடு லெபனான். இதன் வடக்கில் சிரியாவும் தெற்கில் இஸ்ரேலும் அண்டை நாடுகளான அமைந்துள்ளன.

லெபனானின் தலைநகர் பெய்ரூட். இது துறைமுக நகரமாகும். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெடிமருந்துகளுடன் லெபனான் எல்லைக்குள் நுழைந்த ஒரு கப்பலை அந்த நாட்டு கடற்படை மடக்கிப் பிடித்தது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக வளாகம் கரும்புகையாக காட்சியளிக்கிறது.


அந்த கப்பலில் சுமார் 3 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் இருந்தது. அபாயகரமான அந்த வெடிபொருளை பெய்ரூட் துறைமுகத்தின் கிட்டங்கியில் குவித்து வைத்திருந்தனர். நேற்று நள்ளிரவு அந்த வெடிமருந்து கிடங்கு பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.


இதில் துறைமுக வளாகத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகினர். சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். அபாயகரமான வெடிமருந்து என்பதால் அவர்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்று டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெடிவிபத்தில் இருந்து தப்பிக்க பதறியடித்து ஓடும் மக்கள்.


பெய்ரூட் துறைமுகம் முழுவதும் போர்க்களமாக காட்சியளிக்கிறது. சுமார் 130 மைல்களுக்கு அப்பால் உள்ள சைப்ரஸ் நாட்டில் கூட வெடிசப்தம் தெளிவாக கேட்டுள்ளது. வானளாவிய உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. துறைமுக வட்டாரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவு வரை உள்ள கட்டிடங்கள் சுக்குநூறாக நொறுங்கியுள்ளன.


லெபனான் பிரதமர் ஹசன் கூறுகையில், “வெடிவிபத்து எவ்வாறு நேரிட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வெடிவிபத்தில் படுகாயமடைந்த நபர்.


வெடிவிபத்துக்கான காரணம் குறித்து லெபனான் அரசு வட்டாரங்கள் கூறும்போது, வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கி அருகே ஊழியர் ஒருவர் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீப்பொறி பறந்து விபத்து நேரிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளன.


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறும்போது, இது வெடி விபத்து போல தெரியவில்லை. வெடிபொருள் கிட்டங்கியை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் தெரிகிறது என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.

வெடி விபத்தில் தூக்கி வீசப்பட்ட கார்.


வெடிமருந்து நிபுணர்கள் கூறும்போது, “சுமார் 3 ஆயிரம் டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியுள்ளது. இது சிறிய ரக அணு குண்டுக்கு சமமாகும். இந்த வெடிவிபத்தில் காயமடைந்தவர்கள் உயிர் பிழைப்பது கடினம்.

பெய்ரூட் நகரம் முழுவதும் விஷவாயு சூழ்ந்துள்ளது. இன்னும் சில நாள்களுக்கு பெய்ரூட் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். விஷவாயுவை சுவாசித்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும். உண்மையிலேயே விபத்து நேரிட்டதா அல்லது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது விசாரணையில்தான் தெரியவரும் ” என்று கூறியுள்ளனர்.

பெய்ரூட் துறைமுக வளாகத்தில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.


மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்கள் கூறுகையில், “அணு குண்டு தாக்குதலால் உருக்குலைந்த ஜப்பானின் ஹிரோஷிமா போன்று பெய்ரூட் மாறியுள்ளது.

எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்கிறது. நாலாபுறமும் இருந்து உதவி கோரி அழைப்புகள் வருகின்றன. எங்களால் சமாளிக்க முடியவில்லை. உயிரை பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்தனர்.


அபாயகரமான வெடிபொருளை துறைமுக கிட்டங்கியில் அலட்சியமாக வைத்திருந்தது ஏன் என்று லெபனானிடம் உலக நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பின்றி இருப்பதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த நாடுகளின் அணு குண்டு கிட்டங்கிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் ஒட்டுமொத்த உலகத்துக்கும் பேராபத்து ஏற்படும் என்று மனித உரிமை அமைப்புகள் இந்த நேரத்தில் சுட்டிக் காட்டியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *