கர்நாடகாவின் பெலகாவி பகுதியை சேர்ந்தவர் ரவி ஹோங்கல் (வயது 49). சிறு வயது முதலே புகைப்பட கலையில் இவருக்கு மிகுந்த ஆர்வம். அதையே தனது தொழிலாக்கி கொண்டார்.
பொதுவாக தொழில் வேறு, வீடு வேறு என்ற வகையில் பெரும்பாலான மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். இதில் ரவி ஹோங்கல் வித்தியாசமானவர். அவரது நாடி, நரம்பில் புகைப்பட கலை புகுந்து தாண்டவமாடுகிறது. வீடு, வீதி என திரும்பும் திசையெல்லாம் அவருக்கு புகைப்பட வாசம் மட்டுமே வீசுகிறது.
பெலகாவியில் 71 லட்ச ரூபாய் செலவில் புதிய வீட்டை ரவி கட்டியுள்ளார். அந்த வீடு அச்சு அசல் கேமரா போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான கேமரா முகப்பு, கேமரா பிளாஷ் வீட்டை அலங்கரிக்கின்றன. மேலும் முன்னணி கேமரா தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களையும் வீட்டின் முகப்பு பகுதிகளில் எழுதி வைத்துள்ளார்.

அவரது வீடு அப்பகுதியில் பிரபல சுற்றுலா தலமாக மாறிவிட்டது. பலரும் ரவியின் வீட்டின் முன்பு குவிந்து செல்பி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
புதிய வீட்டின் முன்பு ரவி, அவரது மனைவி, மகன்கள் நின்று புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.