முகநூல் பதிவால் பற்றி எரிகிறது பெங்களூரு.. துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…

பெங்களூரு புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி. இவரது தங்கை மகன் நவீன் (வயது 23) இவர் முகநூலில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மத வெறுப்பை தூண்டும் வகையில் நேற்றிரவு ஒரு பதிவை வெளியிட்டு, எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட போலீஸ் வாகனம்.
கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட போலீஸ் வாகனம்.


ஆத்திரம் அடைந்த குறிப்பிட்ட மதத்தினர் காடுகொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை போலீஸார் ஏற்க மறுத்ததால் செவ்வாய்க்கிழமை இரவு நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். இந்நிலையில் காவல் பைரசந்திராவில் உள்ள அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீட்டில் நவீன் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் பரவியது.


அங்கு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல் அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதன்பின் அம்பேத்கர் சாலையில் திரண்ட வன்முறை கும்பல் வழியில் சென்ற வாகனங்களை தாக்கினர். ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், இரு சக்கர வாகனங்களையும், ஏடிஎம் இயந்திரங்களையும் தாக்கி தீ வைத்து எரித்தனர்.

உடைத்து நொறுக்கப்பட்ட எடிஎம் இயந்திரம்.
உடைத்து நொறுக்கப்பட்ட எடிஎம் இயந்திரம்.

காடு கொண்டனஹள்ளி, தேவர் ஜீவனஹள்ளி, காவல் பைரசந்திரா காவல் நிலையங்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.
நள்ளிரவு 2 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.

அப்போது வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள், போலீஸார், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் மீது கட்டை, இரும்பு கம்பி, பாட்டில், கற்களை கொண்டு தாக்கினர். போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தினர். அப்போதும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வராததால் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கலவரத்தின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 3 பேர் உயிரிழந்தனர். வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலில் 60 போலீஸார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முதல்வர் எடியூரப்பா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். வன்முறையில் ஈடுபடும் சமூகவிரோதிகளை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளார்.

கலவரத்தின்போது பல்வேறு இடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *