ஒரு கோடி பேருக்கு அமெரிக்க குடியுரிமை…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் ஒரு கோடி பேருக்கு குடியுரிமை வழங்க புதிய அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.

“அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக, எல்லையை தாண்ட யார் முயற்சி செய்தாலும் அவர்களின் காலில் சுடுங்கள்” என்று தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்  உத்தரவிட்டார். பெரும்பாலான அகதிகள் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவில் நுழைவதால் இருநாட்டு எல்லையில் மிகப்பெரிய சுவர் எழுப்பவும் ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.

கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்க எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பலர் கைது செய்யப்பட்டனர். இதில் தாய் ஒரு முகாமிலும் குழந்தை ஒரு முகாமிலும் அடைக்கப்பட்டனர். அதிபர் ட்ரம்பின் மனிதாபிமானற்ற செயல்களை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக சாடினார்.

 தேர்தலில் பைடன் வெற்றி பெற்று அடுத்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். இதைத் தொடர்ந்து குடியுரிமை விவகாரத்தில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

அமெரிக்கா முழுவதும் சட்டவிரோதமாக சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் தங்கியுள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். அவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 95,000 அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பைடன் தரப்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதியில், “குடியுரிமை விவகாரங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்படும். அமெரிக்க எல்லையில் நுழைந்து கைது செய்யப்படும் குடும்பத்தினர் தனித்தனியாக பிரிக்கப்பட மாட்டார்கள். 1.1 கோடி சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“அமெரிக்காவுக்கு வேலை தேடி வருவோருக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அவர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவில் தங்க வசதியாக விசா நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்யப்படும். முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும்” என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பைடன் அளித்துள்ளார். இந்த வாக்குறுதி அப்படியே நிறைவேற்றப்படும் என்று பைடன் தரப்பு உறுதி அளித்திருக்கிறது.

ஜோ பைடன் உரை

அமெரிக்க அதிபர் தேர்தலில் நேற்று இரவு ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதும் டெலவரின் வில்மிங்டனில் மக்களீடையே அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

அமெரிக்க மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஜனநாயக கட்சியின் வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி.  நாடு முழுவதும் அமெரிக்க மக்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். நான் அமெரிக்க அதிபராக பதவியேற்கும்போது நாட்டை ஒன்றிணைப்பேன். குடியரசு கட்சி மாகாணம், ஜனநாயக கட்சி மாகாணம் என்று பிரித்துப் பார்க்க மாட்டேன். அனைத்து மாகாணங்களிலும்ம் அமெரிக்காவை மட்டுமே பார்ப்பேன்.

அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள், பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியினரை எதிரிகளாக பாவிக்கக்கூடாது. அவர்கள் நமது எதிரிகள் கிடையாது. அவர்கள் அமெரிக்கர்கள். 

 நமது முதல் பணி கரோனா வைரஸ் பரவலை  தடுக்க வேண்டும். அமெரிக்கா நலம் பெற வேண்டும். வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக நிபுணர்கள் குழு விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கமலா ஹாரிஸ் உறுதி

அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸும் விழாவில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

எனது தாய் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ் தன்னுடைய 19-வது வயதில் அமெரிக்காவில் கால் பதித்தார்.  அவர்தான் எனது வாழ்வின் முன்மாதிரி. அவர் மறைந்துவிட்டாலும் இன்றும் என் இதயத்தில் வாழ்கிறார். 

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்க உள்ளேன். இது கருப்பின பெண்கள், ஆசிய பெண்கள், வெள்ளையின பெண்கள், லத்தின் பெண்கள், பழங்குடியின பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களும் பெருமிதம் கொள்ளும் நேரமாகும். அடுத்தடுத்து அதிபர் மாளிகைக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சமஉரிமை, சுதந்திரம், நீதிக்காக பெண்கள் போராடி வெற்றி பெற்றுள்ளனர். கருப்பின பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றபோதிலும் அவர்கள் அமெரிக்க ஜனநாயகத்தின் முதுகெலும்பாக உள்ளனர். 

இந்த தேர்தலில் நம்பிக்கை, ஒற்றுமை, பண்பு, அறிவியல், உண்மைக்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் அமெரிக்காவில் புதிய வரலாறு எழுதப்பட உள்ளது. 

புதிய அதிபர் ஜோ பைடன், “குணமளிப்பவர், ஒன்றிணைப்பவர், பக்குவப்பட்டவர்’. இதற்கு முன்பு துணை அதிபர் வேட்பாளராக பெண்கள் அறிவிக்கப்பட்டது கிடையாது. என்னை, துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ததன் மூலம் ஜோ பைடன் பழைமையை உடைத்தெறிந்தார். 

புதிய அரசு பதவியேற்ற பிறகு கரோனா வைரஸ் தடுப்பு, பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து கரோனா வைரஸ் வேரறுக்கப்படும். பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் வேகம் பெறும்.பருவநிலை மாறுபாடு பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.  அரசு நிர்வாகத்தில் இனவாதம் ஒழிக்கப்படும். நாடு ஒன்றிணைக்கப்படும். 

நாம் கடந்து செல்ல வேண்டிய பாதை கடினமானது. எனினும் கடின உழைப்பால், நல்லெண்ண முயற்சிகளால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் முன்னேற புதிய அரசு பாடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *