பிஹார் 2-ம் கட்ட தேர்தலில் 54.11 % வாக்குப்பதிவு

பிஹார் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் 54.11 % சதவீத வாக்குகள் பதிவாகின.

பிஹார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. லோக் ஜனசக்தி தனித்துப் போட்டியிடுகிறது. ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் தலைமையில் 6 கட்சிகள் கூட்டணியும் தேர்தல் களத்தில் உள்ளது.

94 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பிஹாரில் முதல்கட்டமாக கடந்த 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக பாட்னா, வைஷாலி, தர்பங்கா, ரஹோபூர், ஹஸன்பூர், பங்கிபூர், மதுபானி உள்ளிட்ட  94 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 2.85 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 41,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கரோனா வைரஸ் தடுப்பு நடைமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன.

தேர்தல் நடைபெற்ற 94 தொகுதிகளில் 86 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த 8 தொகுதிகளில் மட்டும் மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 

லாலுவின் மகன்கள் போட்டி

இரண்டாம் கட்ட தேர்தலில் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகனும் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், ரஹோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 

லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ஹஸன்பூரில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.  நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹா, பங்கிபூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ளார்.  முதல்வர் நிதிஷ்குமார் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 4 அமைச்சர்களும் 2-ம் கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

முதல்வர் வாக்களித்தார்

முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி, பாஜக மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால்  ஆகியோர் பாட்னா வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர். மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் ஹாஜிப்பூரில் வாக்களித்தார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் சிராக் பாஸ்வான் ககாரியாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குரிமையை செலுத்தினார்.

பாட்னாவில் வாக்கை பதிவு செய்தபிறகு முதல்வர் நிதிஷ் குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது “அனைவரும் தங்களது வாக்குரிமையை செலுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி கூறும்போது, “வாக்காளர்கள் அனைவரும்  கரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்று வாக்களிக்க வேண்டும். மக்களின் வாக்கால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்றார்.

பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்

பைகுந்த்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் மிதிலேஷ் திவாரி பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது கோபால்கன்ஜ் பகுதியில் அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அவரும் பாஜக மூத்த தலைவர்களும் காயமடைந்தனர்.

ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மன்ஜித் சிங், பைகுந்த்பூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரது ஆதரவாளர்களே பாஜக வேட்பாளரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.  முதல்வர் நிதிஷ்குமாரின் நெருங்கிய நண்பர் என்பதால் மன்ஜித் சிங் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

பாக்ரி தொகுதியின் பெகுசாராய் பகுதியில் வாக்குப்பதிவு தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. இதை எதிர்த்து ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். பதுகா தொகுதியின் சோனாரு பகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

பாட்னாவின் திக்ஹா வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் சஞ்சீவ் ஆதரவாளர்களுக்கும் பாரதிய சபலாலாக் வேட்பாளர் மாயாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தர்பங்கா பகுதியின் 2 வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அங்கு வாக்குப்பதிவு தொடங்க சிறிது நேரம் காலதாமதமானது. இதர பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 54.11 % சதவீத வாக்குகள் பதிவானது. 

மூன்றாம் கட்டமாக வரும் 7-ம் தேதி 78 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  

இடைத் தேர்தல்

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேசம் 28, குஜராத் 8, உத்தர பிரதேசம் 7, ஒடிசா, நாகாலாந்து, கர்நாடகா, ஜார்க்கண்டில் தலா 2, சத்தீஸ்கர், தெலங்கானா, ஹரியாணாவில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *