பிஹாரில் நாளை வாக்கு எண்ணிக்கை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பிஹாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. கடந்த 28-ம் தேதி 71 தொகுதிகள், கடந்த 3-ம் தேதி 94 தொகுதிகள், கடந்த 7-ம் தேதி 78 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

பிஹாரில் தற்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தேர்தலில் கடும் போட்டி நிலவியது. ஆளும் கூட்டணி சார்பில் முதல்வர் நிதிஷ் குமாரும் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவும் முதல்வர் வேட்பாளர்களாக முன்நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி பிஹார் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அந்த கட்சி 136 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியது. அதாவது ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பாஜகவுக்கு எதிராக  வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

“தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைப்போம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்கமாட்டோம்” என்று லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் கூறியுல்ளார்.

ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைமையில் பகுஜன் சமாஜ், ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிரிய லோக் சமதா தலைவர் உபேந்திர குஷ்வாகா அறிவிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக் கணிப்பு

கடந்த 7-ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளில் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்படும். லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. 55 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முடிவு எப்போது தெரியும்?

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் சிறிது காலதாமதம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பிறகு காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரங்கள் தெரியவரும். எனினும் மதியம் 12 மணிக்கு பிறகே யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்பதை உறுதியாக கணிக்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *