பிஹார் 2-ம் கட்ட தேர்தலில் 34% கோடீஸ்வர வேட்பாளர்கள்

பிஹார் 2-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 34 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.

பிஹாரில் கடந்த 28-ம் தேதி முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. வரும் 3-ம் தேதி இரண்டாம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 1,463 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 495 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். அதாவது மொத்த வேட்பாளர்களில் 34 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.

வேட்பாளர்களின் பிரமாண பத்திர தகவல்களின் அடிப்படையில் 118 வேட்பாளர்களிடம் 5 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் உள்ளன. 185 வேட்பாளர்களிடம் ரூ.2 கோடி முதல் ரு.5 கோடி வரையும், 426 வேட்பாளர்களிடம் ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையும் சொத்துகள் உள்ளன. 462 வேட்பாளர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை சொத்துகளை வைத்துள்ளனர். இதர 272 வேட்பாளர்களிடம் ரூ.10 லட்சத்துக்கும் குறைவாகவே சொத்துகள் உள்ளன.

லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் 56 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 46 பேர் கோடீஸ்வரர்கள். பாஜக சார்பில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 39 பேர் கோடீஸ்வரர்கள்.

சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி சார்பில் 52 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் 38  பேர் கோடீஸ்வரர்கள். ஐக்கிய ஜனதா தளத்தின்  43 வேட்பாளர்களில் 35 பேர் கோடீஸ்வரர்கள். பகுஜன் சமாஜ் சார்பில் 33 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 11 பேரிடம் கோடிக்கும் அதிகமாக சொத்துகள் உள்ளன. காங்கிரஸின் 24 வேட்பாளர்களில் 20 பேர் கோடீஸ்வரர்கள்.

அதிக சொத்துகளை வைத்திருக்கும் வேட்பாளர் என்ற வகையில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சஞ்சீவ் சிங் முதலிடத்தில் உள்ளார். அவரிடம் 56.62 கோடி சொத்துகள் உள்ளன.  அவருக்கு அடுத்து ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் டியோ குமார் 2-வது இடத்தில் உள்ளார். அவரிடம் ரூ.49 கோடி சொத்துகள் உள்ளன. 

குற்றப் பின்னணி

மொத்த வேட்பாளர்களில் 502 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம் 56, பாஜக 29, காங்கிரஸ் 14, லோக் ஜன சக்தி 28, பகுஜன் சமாஜ் 16, ஐக்கிய ஜனதா தளத்தின் 20 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

மொத்த வேட்பாளர்களில் 720 பேர் பட்டதாரிகள். 602 வேட்பாளர்கள் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளனர். 13 வேட்பாளர்கள் பட்டயப் படிப்பை முடித்துள்ளனர். 122 பேர் எழுத, படிக்க மட்டுமே தெரியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

594 வேட்பாளர்கள் 25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 712 பேர் 41 வயது முதல் 60 வயதை உடையவர்கள். 156 வேட்பாளர்கள் 61 வயது முதல் 80 வயதுகாரர்கள். 86 வயது வேட்பாளர் ஒருவரும் களத்தில் உள்ளார். இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,463 வேட்பாளர்களில் 147 பேர் பெண்கள் ஆவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *