அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் பிஹாரில் 3 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல்

அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் பிஹாரில் 3 கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

பிஹார் சட்டப்பேரவையின் காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வைரஸ் பிரச்சினை இப்போதைக்கு ஓயாது என்பது தெரிகிறது. ஒரு நாள் வைரஸ் தொற்று குறைகிறது. மறுநாள் கூடுகிறது.

மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. அதேநேரம் மக்களின் உடல் நலனையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.

எனவே போதிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 28 , நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு

பிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 38 தொகுதிகள் எஸ்சி, எஸ்.டி. பிரிவினருக்கான தனித்தொகுதிகளாகும். முதல்கட்ட தேர்தலில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக 31,000 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படும்.

2-ம் கட்ட தேர்தலில் 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இதற்காக 42,000 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்படும். 3-ம் கட்ட தேர்தலில் 78 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படும். இதற்காக 33,500 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்..
வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். இதன்படி காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நீடிக்கும்.

பிஹாரில் 7.29 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். வழக்கமாக 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். பிஹார் தேர்தலில் 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. 3 கட்ட தேர்தலின்போது 46 லட்சம் முகக்கவசங்கள், 7.6 லட்சம் முகத் தடுப்புகள், 23 லட்சம் கையுறைகள், 6 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் பயன்படுத்தப்படும்.

கட்டுப்பாடுகள்

வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய 5 வாகனங்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த முறை 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 2 பேர் மட்டும் வேட்பாளருடன் வரலாம். ஆன்லைன் வாயிலாகவும் வேட்பாளர்கள், வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

கொரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் தபால் வாக்குகளையும் பயன்படுத்தலாம். 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் தபால் வாக்குகளை பயன்படுத்தலாம்.

எங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம் என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு செய்வார். சமூக இடைவெளியைப் பின்பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும். வீடு வீடாக பிரச்சாரம் செய்யும்போது 5 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது சமூக வலைதளங்கள் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும். சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை தூண்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

அரசியல் கள நிலவரம்

கடந்த 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகவும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.

ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜன சக்தி கூட்டணி ஓரணியாக தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய முதல்வர் நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த லோக் ஜன சக்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ஏற்கெனவே பச்சைக்கொடி காட்டி விட்டனர். ஆளும் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். அவரது மகன் தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார்.

பிரச்சார வியூகம்

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதிஷ் குமாரின் நல்லாட்சி, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது ஆகியவற்றை முன்னிறுத்தி ஆளும் கூட்டணி தீவிர பிரச்சாரம் செய்யும் என்று அந்த கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா வைரஸ், விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எழுப்பும் என்று அந்த கூட்டணி வட்டாரங்கள் கூறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *