பிஹாரில் இறுதி கட்ட தேர்தல் நேற்று நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளில், முதல்வர் நிதிஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 28-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 71 தொகுதிகளுக்கும் கடந்த 3-ம் தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 94 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதியாக நேற்று நடந்த 3-ம் கட்ட தேர்தலில் 78 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின.
போட்டியிடும் அணிகள்
பிஹார் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆளும் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 115, பாஜக 110, விகாஸ்சீல் இன்சான் கட்சி 11, ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றன .
எதிர்க்கட்சி கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144, காங்கிரஸ் 70, சிபிஎம்-எம்எல் கட்சி 19, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6, மார்க்சிஸ்ட் கட்சி 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
ஆளும் கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி கூட்டணியில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
எல்ஜேபி தனித்துப் போட்டி
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிடுகிறது. அந்த கட்சி 136 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அந்த கட்சி போட்டியிடுகிறது. பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம் என்று லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் கூறி வருகிறார்.
ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைமையில் பகுஜன் சமாஜ், ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 104 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் 80 தொகுதிகளிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி 18 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பிஹார் தேர்தலில் சமாஜ்வாதி போட்டியிடவில்லை. அந்த கட்சி ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
கருத்துக் கணிப்பு
இந்த பின்னணியில் பிஹார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பல்வேறு ஊடகங்கள் நேற்று இரவு வெளியிட்டன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
டைம்ஸ் நவ், சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி (என்டிஏ) 116 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மெகா கூட்டணி (எம்ஜிபி) 120 இடங்களையும், லோக் ஜனதா தளம் (எல்ஜேபி) ஓரிடத்தையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி நியூஸ், சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் என்டிஏ கூட்டணி 104 முதல் 128 இடங்களையும், எம்ஜிபி கூட்டணி 108 முதல் 131 இடங்களையும், எல்ஜேபி 1 முதல் 3 இடங்களையும், இதர கட்சிகள் 4 முதல் 8 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி- ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பில் என்டிஏ கூட்டணி 91 முதல் 117 இடங்களிலும், எம்ஜிபி கூட்டணி 118 முதல் 138 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிவி9 பாரத்வர்ஷ் நடத்திய கருத்துக் கணிப்பில் என்டிஏ கூட்டணி 110 முதல் 120 இடங்களையும், எம்ஜிபி கூட்டணி 115 முதல் 125 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுடேஸ் சாணக்கியா நடத்திய கருத்துக் கணிப்பில் என்டிஏ கூட்டணி 44 முதல் 56 இடங்களையும் எம்ஜிபி கூட்டணி 169 முதல் 191 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் என்டிஏ கூட்டணி 120 முதல் 127 இடங்களையும், எம்ஜிபி கூட்டணி 71 முதல் 81 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்டியா டுடே, ஆக்சிஸ் மை இன்டியா நடத்திய கருத்துக் கணிப்பில் என்டிஏ கூட்டணி 69 முதல் 91 இடங்களிலும் எம்ஜிபி கூட்டணி 139 முதல் 161 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ், டி.வி. ரிசர்ச் நடத்திய கருத்துக் கணிப்பில் என்டிஏ கூட்டணி 110 முதல் 117 தொகுதிகளையும் எம்ஜிபி கூட்டணி 108 முதல் 123 இடங்களையும் எல்ஜேபி 4 முதல் 10 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.