பீகார் தேர்தல்.. முழு பின்னணி…

பீகார் தேர்தல்.. முழு பின்னணி… விவரங்களை இந்த செய்தியில் அறிந்து கொள்ளலாம்.

பீகார் சட்டப்பேரவையின் பலம் 243 ஆகும். அந்த மாநில சட்டப்பேரவையின் காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து பீகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அறிவித்தது. 

பீகாரில் தற்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் பாஜக 110 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் விகாஸ்சீல் இன்சான் கட்சிக்கு 11, ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆளும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் முன்நிறுத்தப்பட்டுள்ளார்.

எதிரணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்த கூட்டணியை சேர்ந்த சிபிஎம்-எம்எல் கட்சிக்கு 19, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பீகார் தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்.
பீகார் தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி பீகார் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த கட்சி 136 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. குறிப்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அந்த கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம் என்று லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் கூறி வருகிறார்.

இதற்கிடையில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைமையில் பகுஜன் சமாஜ், ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 104 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் 80 தொகுதிகளிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி 18 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.  இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாகா  அறிவிக்கப்பட்டுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கூட்டணி வாக்குகளைப் பிரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.  

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி போட்டியிடவில்லை.  அந்த கட்சி ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

71 தொகுதிகளுக்கு தேர்தல்

இந்த பின்னணியில் பீகாரில் முதல்கட்டமாக அமர்பூர், பங்கா, சுல்தான்கன்ஞ், ஜமால்பூர், முங்கர் உட்பட 71 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 2.15 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 31,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. முதல்கட்ட தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி, 8 அமைச்சர்கள் உட்பட 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வாக்குச்சாவடி அலுவலர்கள், போலீஸார், வாக்காளர்கள் முகக்கவசம், முகத் தடுப்புகளை அணிந்திருந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் (வலது), லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் (வலது), லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ்.

வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும். கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச் சாவடிகளில் மட்டும் பிற்பகல் 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

சில இடங்களில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மோதிக் கொண்டனர். ஷாபூர் தொகுதியின் ஷாகாஜாலி கிராமத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். லக்கிசாராய் தொகுதியின் பால்குடார் பகுதியில் சுமார் 3,000 பேர் தேர்தலை புறக்கணித்தனர்.

அவுரங்காபாத் அருகேயுள்ள பாலுகன்ஞ் பகுதி நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். அங்குள்ள வாக்குச்சாவடியில் நேற்று 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. சில வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு சிறிது காலதாமதமானது.

ஜமுய் தொகுதியின் 241 எண் கொண்ட வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு காலதாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக அந்த வாக்குச்சாவடியில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.   

இதர பகுதிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. பகல் 11 மணி வரை 18 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. பிற்பகலில் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. மாலை 6 மணி நிலவரப்படி  53.54 சதவீத வாக்குகள் பதிவாகின. சில தொகுதிகளின் வாக்குப்பதிவு விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. எனவே வாக்குப்பதிவு சதவீதம் 56 சதவீதம் வரை உயரலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறும்போது, “பிஹார் சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன. இந்த தேர்தலில் வைரஸ் பரவல் தடுப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

வரும் நவம்பர் 3-ம் தேதி 94 தொகுதிகளுக்கும், வரும் நவம்பர் 7-ம் தேதி 78 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. வரும் நவம்பர்  10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *