சென்னையில் புதுப்பேட்டை பட ஸ்டைலில் நடந்த பைக் திருட்டு – காட்டிக்கொடுத்த நம்பர் பிளேட்

ஹாய் ப்ரெண்ட்ஸ் நடிகர் தனுஷ் நடித்து வெளியான புதுப்பேட்டை படத்தில் பைக்கை திருடி அதன் பாகங்களை ஒவ்வொன்றாக கழற்றி விற்கப்படுவதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதைப் போல நிஜ சம்பவம் பம்மல் பகுதியில் நடந்திருக்கிறது. பால்வியாபாரி ராதாகிருஷ்ணனின் பைக்கைத் திருடிய இளைஞர், உதிரிபாகங்களை விற்றுவிட்ட நிலையில் இன்ஜினை மட்டும் போலீஸார் மீட்டிருக்கின்றனர். இந்த பைக் திருட்டு நம்பர் பிளேட் மூலம் துப்பு துலங்கியிருக்கிறது.

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பம்மல் வேதகிரி தெருவில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். 39 வயதாகும் இவர், அந்தப்பகுதியில் மாடுகளை வளர்த்து பைக்கில் பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி பால் வியாபாரத்தை முடித்த ராதாகிருஷ்ணன், பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.

பின்னர் மறுநாள் காலையில் பைக்கை காணவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன், சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பைக்கை சிசிடிவி கேமரா பதிவு மூலம் தேடிவந்தனர். ஆனால் பெரும்பாலான சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்திருந்ததால் பைக்கை யார் திருடினார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் பைக் இல்லாமல் நடந்தே சென்று ராதாகிருஷ்ணன் பால் வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஆகஸ்ட் 12-ம் தேதி திருநீர்மலை பகுதியில் ராதாகிருஷ்ணன் பால் வியாபாரத்துக்காகச் சென்றிருந்தார். அப்போது அந்தப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அருகே முட்புதருக்குள் ராதாகிருஷ்ணனின் பைக் நம்பர் பிளேட் மட்டும் கிடந்தது.

அதைப்பார்த்த ராதாகிருஷ்ணன், நம்பர் பிளேட்டை கையில் எடுத்து வைத்துக் கொண்டார். பின்னர் அந்தப்பகுதியில் தேடிபார்த்தபோது அவரின் பைக் சீட் கிடந்தது. ஆனால் பைக்கின் மற்ற உதிரிபாகங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து அவற்றை எடுத்துக் கொண்டு சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு ராதாகிருஷ்ணன் சென்று தகவலைத் தெரிவித்தார்.

உடனடியாக சங்கர் நகர் போலீஸார், காணாமல் போன பைக்கின் உதிரிபாகங்கள் கிடைத்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோ ஒன்று அடிக்கடி அந்தப்பகுதியில் வந்து, செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் அந்தப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் அடிக்கடி திருட்டு போன தகவல் தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோவின் பதிவு நம்பரைக் கொண்டு போலீஸார் விசாரித்தபோது புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது எனத் தெரியவந்தது. அவர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அதனால் திருடப்பட்ட ராதாகிருஷ்ணனின் பைக்கை நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை பட ஸ்டைலில் உதிரி பாகங்களாக விற்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகமடைந்தனர்.

இந்தநிலையில் போலீஸார் தேடிய ஆட்டோ, பம்மல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் முன் நின்றுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்று விசாரித்தபோது அனகாபுத்தூர் எல்ஐசி காலனியைச் சேர்ந்த மணி என்பவர் இரும்பு கம்பிகளைத் திருடியது தெரியவந்தது. மணி அளித்த தகவலின்படி அவரின் நண்பரான லாரன்ஸ் என்பவர்தான் ராதாகிருஷ்ணனின் பைக்கைத் திருடி உதிரி பாகங்களை பழைய இரும்பு கடை நடத்தி வரும் கருப்பசாமி (54) என்பவரிடம் விற்ற தகவல் தெரிந்தது. இதையடுத்து லாரன்ஸ், கருப்பசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கருப்பசாமி கடையில் விற்கப்படாமல் இருந்த பைக்கின் இன்ஜினை மட்டும் போலீஸார் மீட்டனர். அதை சட்டநடவடிக்கைகளுக்குப்பிறகு ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்க போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *