ம.பி.யில் லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம்

மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று அந்த மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்காக மதம் மாறுவது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக் காட்டியுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், மாநிலத்தில் லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார். 

பாஜக ஆளும் ஹரியாணா, கர்நாடகாவிலும் இதுபோன்ற சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்து அந்த மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா போபாலில் நேற்று கூறியதாவது:

லவ் ஜிகாத் மூலம் கட்டாய மதமாற்றம் நடைபெற்று வருகிறது.  இதை தடுக்க அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டப்பிரிவுகள் வரையறுக்கப்படும்.

திருமணத்துக்காக ஒருவர் மதம் மாற விரும்பினால் ஒரு மாதத்துக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் புகார் அளிக்கலாம். மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்காமல் மதமாற்றம் நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய சட்டத்தின்படி கட்டாய மத மாற்றம், மோசடி மூலம் திருமணம் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த திருமணம் செல்லாது.  

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் அண்மையில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரச்சாரம் செய்த அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்,  லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று உறுதி அளித்தார்.  இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 19 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தேர்தல் வெற்றியை தொடர்ந்து லவ் ஜிகாத் தடை சட்டத்தை இயற்ற மத்திய அரசு மும்முரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *