பிறந்தநாள் கேக்கை பட்டா கத்தியால் வெட்டிய பர்த்டே பேபி போலீஸிடம் சிக்கிய சோகம்

கொரோனா ஊரடங்கில் பட்டா கத்தியால் பிறந்தநாளைக் கொண்டாடிய பர்த்டே பேபி, அவரின் நண்பர்களை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு தளர்வுகளுடனும் முழு ஊரடங்கையும் அறிவித்திருக்கிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் சென்னை கண்ணகிநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அப்போது அதை வீடியோவாக எடுத்தவர்கள் சமூகவலைதளங்களிலும் பதிவு செய்தனர். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. அதுகுறித்து கண்ணகிநகர் காவல் நிலையத்துக்கும் புகார் வந்தது.

இதையடுத்து கொரோனா ஊரடங்கில் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் யாரென்று கண்டறிய துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ஜான் விக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் பிறந்தநாளைக் கொண்டாடிய இளைஞர்களைத் தேடிவந்தனர். போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் பிறந்தநாளைக் கொண்டாடிய கண்ணகி நகரைச் சேர்ந்த சுனில் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து சுனிலின் நண்பர்கள் நவீன்குமார்(எ)தொப்பை(20) அப்பு(20), தினேஷ்(18), ராஜேஷ்(19) கார்த்திக்(எ)பீடி கார்த்திக்(30) உள்பட 6பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது 147, 148, 288, 270, 336, 506 ஆகிய சட்டப்பிரிவின்களின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்குப்பிறகு 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரபல ரவுடி பினு, தன்னுடைய பிறந்தநாளை பட்டா கத்தியால் வெட்டிய வழக்கில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பினு ஸ்டைலில் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தப்பட்டியலில் சுனிலின் நண்பர்களும் இடம் பிடித்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *