பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்தக் கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன.   

பீகார் சட்டப்பேரவையின் பலம் 243 ஆகும். அந்த மாநில சட்டப்பேரவைக்கு அக்.28,  நவ.3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் பாஜக 110 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

இந்த கூட்டணியில் அங்கும் வகிக்கும் சிறிய கட்சிகளான விகாஸ்சீல் இன்சான் கட்சி 11, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. முதல்வர் நிதிஷ் குமார், ஆளும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். 

எதிரணியில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி களம் இறங்கியது. இதில் ஆர்ஜேடி 144 தொகுதிகளிலும் காங்கிரஸ் 70 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த கூட்டணியை சேர்ந்த சிபிஎம்-எம்எல் கட்சிக்கு 19, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார். 

மத்தியில்பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி), முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி தனித்துப் போட்டியிட்டது. அந்த  கட்சி 136 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியது. 

 அதாவது முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. பாஜகவின் பெரும்பாலான தொகுதிகளில் எல்ஜேபி போட்டியிடவில்லை. இதுதவிரி ராஷ்டிரிய லோக் சமதா, பகுஜன் சமாஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், ஜனவாதி கட்சி, சுகல்தேவ் சமாஜ் கட்சி, ஜனதந்தரிக் ஆகிய கட்சிகள் இணைந்து தனி அணியாக போட்டியிட்டன. 

வாக்கு எண்ணிக்கை 

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மாநிலம் முழுவதும் 55 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கரோனா தடுப்பு நடைமுறைகள்  பின்பற்றப்பட்டன. இதன்காரணமாக வாக்கு எண்ணிக்கையில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. 

ஆரம்பம் முதலே ஆளும் பாஜக கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தன. பிற்பகல் நிலவரப்படி பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தது. எனினும் சுமார் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆர்ஜேடி கூட்டணி வேட்பாளர்களுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 500 முதல் 1000 வரை மட்டுமே இருந்தது. 

மாலையில் ஆர்ஜேடி கூட்டணி கூடுதலாக சில தொகுதிகளில் முன்னிலை பெற்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. பாஜக கூட்டணியே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது. 

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன. 

ஆர்ஜேடி கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்தன. அந்த கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, சிபிஎம்-எம்எல் 12, இந்திய கம்யூனிஸ்ட் 2 , மார்க்சிஸ்ட் 2 இடங்களை பெற்றன. 

மகா ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணி அணியில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் 5, பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றன.  லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஓரிடத்தைக் கைப்பற்றியது. எல்ஜேபி தனித்துப் போட்டியிட்டாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. 

தேஜஸ்வி யாதவ் வெற்றி 

லாலுவின் இளைய மகனும் ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.  லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ஹஸன்பூரில் வெற்றி பெற்றார். 

நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹா காங்கிரஸ் சார்பில் பன்கிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் பாஜக வேட்பாளர் நிதின் நபினிடம் தோல்வியடைந்தார். கடந்த தேர்தலை போலவே முதல்வர் நிதிஷ் குமார் இந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. ஆளும் கூட்டணியில் இடம்பெற்ற இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மாஞ்சி, இமாம்கன்ஞ் தொகுதியில் வெற்றி பெற்றார். பாஜக சார்பில் ஜமுய் தொகுதியில் போட்டியிட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை ஷ்ரேயாசி சிங் வெற்றி பெற்றார். 

மறு வாக்கு எண்ணிக்கை கோரி மனு

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்ட பதிவில், “ஆளும் அரசு நிர்பந்தம் அளித்து தேர்தல் மோசடியில் ஈடுபட்டுள்ளது” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “குறிப்பிட்ட 8 தொகுதிகளில் 12, 13 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்ஜேடி வேட்பாளர்கள் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஆர்ஜேடி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாட்னாவில் நேற்று தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். 

ஆர்ஜேடி கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிஎம்ஐ-எம்எல் கட்சியும், தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவை அளித்துள்ளது. அதில், “போரே, ஆரே, தாருந்தா தகுதியில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் எங்கள் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். போரே தொகுதியில் எங்கள் வேட்பாளர் 103 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் மறுப்பு

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா நேற்று கூறும்போது, “யாருடைய நிர்பந்தத்துக்கும் ஆணையம் அடிபணியாது. பிஹார் தேர்தல் ஆணையம் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *