சிறையிலிருந்தப்படி துணைதலைவராக தேர்வான பாஜக கவுன்சிலர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் 9-வது வார்டுக்கு பிரபல ரௌடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி போட்டியிட்டார். இவரை எதிர்த்து விஜயலட்சுமியின் சகோதரி ஜெகலட்சுமி மனுதாக்கல் செய்தார்.

வேட்பு மனுவை அவர் வாபஸ் பெற்றதால் போட்டியின்றி விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார். கவுன்சிலரான பிறகு விஜயலட்சுமி, பதவி ஏற்க நேற்று சென்றபோது கஞ்சா வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.

அதற்கு விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள், குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணைக்குப்பிறகு விஜயலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தசூழலில் நெடுங்குன்றம் ஊராட்சியில் துணை தலைவருக்கான தேர்தல் நடந்தது. அதில் துணை தலைவராக கவுன்சிலர் விஜயலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருந்தபடியே விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்து பாஜகவின் வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர், நெடுங்குன்றம் சூர்யா சிறையில் உள்ளார். அவரின் மனைவி விஜயலட்சுமி, கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இவர்கள் இருவரும் பா.ஜ.க.வில் உள்ளனர்.

விஜயலட்சுமியை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். இது நெடுங்குன்றம் பகுதியில் உள்ள ஒருதரப்பினருக்குப் பிடிக்கவில்லை. விஜயலட்சுமி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க அந்த தரப்பு ஏற்கெனவே பல இடையூறுகளை செய்தது.

காவல்துறை மூலம் விஜயலட்சுமிக்கு பல தொல்லைகள் கொடுக்கப்பட்டது. அதனால், டிஜிபியை சந்தித்து விஜயலட்சுமி புகாரளித்தார். அதன்பிறகு போலீஸார் அமைதியாக இருந்தனர். இந்தச் சமயத்தில்தான் பதவி ஏற்க விஜயலட்சுமி சென்றார்.

பதவியை ஏற்றுவிட்டு மேடையிலிருந்து இறங்கிய அவரை போலீஸார் கஞ்சா வழக்கில் கைது செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த வழக்கை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்.

ஏற்கெனவே எஸ்.சி எஸ்டி ஆணையத்துக்கும், தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையத்துக்கும் புகாரளித்திருக்கிறோம்.

கவுன்சிலர் விஜயலட்சுமி கைது செய்யப்பட்ட தகவலையடுத்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், வழக்கறிஞர் அணியின் மாநில தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் என்னை அவருக்கு சட்டரீதியாக உதவும்படி தெரிவித்தனர். உடனடியாக அவருக்கு வேண்டிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்.

கவுன்சிலர் விஜயலட்சுமி சிறையில் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு, சக கவுன்சிலர்களின் செல்வாக்கு காரணமாக அவர் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. விஜயலட்சுமி மீது தொடரப்பட்ட கஞ்சா வழக்குப் பின்னணி குறித்து நீதிமன்றத்தில் முறையீடுவோம். பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *