பாகிஸ்தான் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுகிறாரா?

பாகிஸ்தான் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுகிறாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் சம்பித் பாத்ரா கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சர்வதேச அரங்கில் இந்தியாவை இழிவுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் ஊடகங்களில் இந்தியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவற்றை பார்க்கும்போது பாகிஸ்தான் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது. 

எனது சந்தேகத்தை ராகுல் காந்தியிடமே நேரடியாக கேட்க விரும்புகிறேன். நீங்கள் (ராகுல் காந்தி) பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட போகிறீர்களா? தயவு செய்து பதில் கூறுங்கள்.

பாஜக வட்டாரத்தில் ராகுல் காந்தியை, ‘ராகுல் லாகூரி’  (பாகிஸ்தானின் லாகூர் நகரவாசி) என்று அழைக்கத் தொடங்கிவிட்டோம். பாகிஸ்தான் தேர்தலில் ராகுல் காந்தி வெற்றி பெறுவதற்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.

‘இந்திய தேசிய காங்கிரஸ்’ விரைவில் ‘பாகிஸ்தான் தேசிய காங்கிரஸாக’ மாறப்போகிறது. அந்த கட்சி சார்பில் ஜின்னாவின் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவார்கள். லாகூர் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கூச்சலிட்டது ஏன்? இந்தியாவை ராகுல் காந்தி வெறுக்கிறார் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் சசி தரூர் பாகிஸ்தான் ஊடகத்தில் இந்தியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் உலகளாவிய அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் இந்தியா தோல்வி அடைந்திருப்பதாக பாகிஸ்தான் ஊடகத்தில் சசி தரூர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

வடகிழக்கு மக்கள், தப்ளிக் ஜமாத் விவகாரங்கள் குறித்தும் பாகிஸ்தான் ஊடகத்தில் எதிர்மறையான கருத்துகளை சசி தரூர் கூறியிருக்கிறார். இந்த விவகாரங்களை எல்லாம் பாகிஸ்தான் ஊடகத்தில் பேச வேண்டுமா?

இந்தியாவை போன்ற ஜனநாயக நாடு உலகில் வேறு எங்கும் கிடையாது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினர் மிகக் கடுமையாக துன்புறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ, பிரியங்கா காந்தியோ எப்போதாவது கேள்வி எழுப்பி இருப்பார்களா? இதற்கு சசி தரூர் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் இலக்கிய விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பாகிஸ்தான் ஊடக நிருபர் ஒருவரோடு சசி தரூர் கலந்துரையாடினார்.

சசி தரூர் கூறும்போது, “கரோனா வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று கடந்த பிப்ரவரியிலேயே ராகுல் காந்தி எச்சரித்தார். ஆனால் வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துவிட்டது. தப்ளிக் ஜமாத் நிகழ்ச்சி மூலமே இந்தியாவில் கரோனா வைரஸ் பரவியது என்று மோடி அரசு உள்நோக்கத்துடன் குற்றம் சாட்டியது. வடகிழக்கு மக்களின் உருவதோற்றம் காரணமாக அவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது” என்று கூறினார். சசி தரூரின் இந்த கருத்து காரணமாகவே பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *