பிஹாரில் இலவச கொரோனா தடுப்பூசி .. பாஜக வாக்குறுதி…

பிஹாரில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பிஹாரில் வரும் 28-ம் தேதி, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஓரணியாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் எதிரணியாகவும் போட்டியிடுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி தனித்துப் போட்டியிடுகிறது.

ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் கடந்த செப்டம்பர் இறுதியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாஜக சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பிஹார் தலைநகர் பாட்னாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கி கூறினார். அவர் கூறியதாவது:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிலையில் உள்ளது. தடுப்பூசி தயாரானதும் அவற்றை பெருமளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிஹாரில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். இதுதான் எங்களது முதல் தேர்தல் வாக்குறுதியாகும்.

மாநிலம் முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதன்படி புதிதாக 3 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.  சுகாதாரத் துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 

வரும் 2022-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். பிஹாரின் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்க அடுத்த 2 ஆண்டுகளில் புதிய பால் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். கோதுமை, அரிசி மட்டுமன்றி பருப்பு வகைகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்.  

பிஹாரில் ஒரு காலத்தில் காட்டாட்சி நடைபெற்றது. அப்போது மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன. பாஜக கூட்டணி ஆட்சியில் மக்களின் நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பிஹாரின்  நடைபெறும் நல்லாட்சியால் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி அடைந்த மாநிலமாக பிஹார் உருவெடுத்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விமர்சனத்துக்குப் பதில்

பிஹார் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா இலவச தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இதர மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி கிடையாதா என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கூறியதாவது:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிலையில் உள்ளது. தடுப்பூசி தயாரான பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு குறைந்த விலையில் வழங்கும். 

மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதா அல்லது அதற்கான விலையை நிர்ணயிப்பது, அந்தந்த மாநில அரசுகளின் உரிமை. அந்த வகையில் பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளோம்.

இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *