ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க ரூ.25 கோடி அளிப்பதாக பாஜக பேரம் பேசி வருகிறது, ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகள், சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். இதன்காரணமாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் கடந்த மார்ச் மாதம் பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்தது.
ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெய்ப்பூரில் இன்று அவர் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு தீவிரமாக போராடி வருகிறது. ஆனால் பாஜக மூத்த தலைவர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பெரும் தொகை கொடுத்து இழுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
காங்கிரஸை சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி வழங்க பாஜக முன்வந்துள்ளது. தொலைபேசி வாயிலாக குதிரை பேரம் நடந்துள்ளது. பாஜகவுக்கு மக்கள் நலன் மீது அக்கறை கிடையாது. ஆட்சியை கவிழ்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.